குடும்ப கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக மக்களவையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைய கூடாது: காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுடெல்லி: மக்கள் தொகை கணக்கீட்டின்படி மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மறுவரையறை செய்ய வேண்டுமென்பதில் ஒன்றிய பாஜ அரசு உறுதியாக உள்ளது. அவ்வாறு செய்தால், உபி, பீகார் போன்ற மாநிலங்களின் மக்களவை தொகுதியின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறையும். இது குறித்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக தென் இந்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது. அப்படி நடக்காமல் இருக்க சரியான சூத்திரங்கள் வகுக்கப்பட வேண்டும். குடும்ப கட்டுப்பாட்டில் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்கள் முன்னோடியாக இருக்கின்றன.
அதனால்தான் 2001ல் வாஜ்பாய் அரசு 2026ம் ஆண்டுக்குப் பிறகு எடுக்கப்பட்ட முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மக்களவையில் மறுசீரமைப்புகளைச் செய்ய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 82ஐ திருத்தியது. ஆனால், 2021ல் திட்டமிடப்பட்டபடி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால், தற்போது 2026 என்பது 2031ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை குறிக்கும். நீண்ட காலமாகத் தாமதமாகி வந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு விரைவில் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகின்றன. மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை தீர்மானிக்க அந்த கணக்கெடுப்பு பயன்படுத்தப்படுமா? அப்படிப்பட்ட சமயத்தில், தென் இந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கக் கூடாது என்பதில் சந்தேகம் இல்லை’’ என்றார்.


