புதுச்சேரியில் போலி மருந்துகள் விற்ற விவகாரம் 34 போலி மருந்து குறித்து ஆய்வு செய்ய வேண்டும்: தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவு
சென்னை: பிரபல தனியார் மருந்து நிறுவனம், புதுச்சேரியில் தங்கள் நிறுவனம் பெயரில் போலி மருந்துகளை தயாரிப்பதாக கடந்த மாதம் சிபிசிஐடி போலீசாருக்கு புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவர், பிரபல நிறுவனத்தின் புதுச்சேரிக்கான விநியோகஸ்தர் உரிமையை பெற்று, மருந்து நிறுவனம் தயாரிக்கும் 36 வகையான மருந்துகளை போலியாக தயாரித்து, ஒரிஜினல் மருந்துகளுடன் கலந்து விற்றது தெரியவந்தது. அதன்பேரில், ராஜாவுடன் இருந்த ராணா மற்றும் மெய்யப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலி மருந்துகளை பதுக்கி வைத்திருந்த 3 குடோன்கள் மற்றும் போலி மருந்து தொழிற்சாலையை சோதனை நடத்தி சீல் வைத்தனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் போலி மருந்துகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழகத்தில் குறிப்பிட்ட பேட்ச் எண் (மருந்து) கொண்ட 34 போலி மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்த புதுச்சேரி மாநில அரசு, இந்தியாவில் அனைத்து மாநில அரசுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் குறிப்பிட்ட பேட்ச் எண் கொண்ட 34 வகையான போலி மருந்துகள் எந்தெந்த மருந்தகங்களில் விற்கப்படுகிறது.
அந்த குறிப்பிட்ட பேட்ச் எண் மருந்தை உடனடியாக பறிமுதல் செய்து ஆய்வுக்கு உட்படுத்தவும், மருந்துகள் எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளவும் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 34 வகையான போலி மருந்துகள் தமிழகத்தில் எந்த விநியோகஸ்தர் மூலம் பெறப்படுகிறது, அவர் எந்த முகவரியிலிருந்து மருந்துகளை பிரித்து வழங்குகிறார், மருந்தகங்களுக்கு மட்டும் விநியோகிக்கிறாரா அல்லது மருத்துவமனைகள், கிளினிக் உள்ளிட்டவைக்கும் இந்த குறிப்பிட்ட பேட்ச் எண் கொண்ட மருந்துகள் விநியோகிக்கப்படுகிறதா உள்ளிட்ட விவரங்களை ஆய்வு மேற்கொள்ளவும் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.


