Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பீகாரில் வங்கதேசம், நேபாளம், மியான்மரை சேர்ந்த போலி வாக்காளர்கள்? அது ‘சூத்ரா’ அல்ல... ‘மூத்ரா’ லாலு மகன் விளாசல்: பாஜகவின் கைப்பாவை தேர்தல் கமிஷன் என்று குற்றச்சாட்டு

பாட்னா: பீகாரில் வங்கதேசம், நேபாளம், மியான்மரை சேர்ந்த போலி வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், அது ‘சூத்ரா’ அல்ல... ‘மூத்ரா’ என்று கூறிய தேஜஸ்வி, பாஜகவின் கைப்பாவை தேர்தல் கமிஷன் என குற்றம்சாட்டினார். பீகார் மாநிலத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்கதேசம், மியான்மர் போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் சட்டவிரோதமாக இடம்பெற்றுள்ளதாகத் தங்களுக்கு ‘ஆதாரங்கள்’ கிடைத்திருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, வாக்காளர்களின் குடியுரிமையை உறுதி செய்வதற்காக, ‘சிறப்புத் தீவிர திருத்தப் பணி’ என்ற பெயரில் வாக்காளர் பெயர், முகவரி சரிபார்ப்புப் பணியை கடந்த ஜூன் 25 அன்று தேர்தல் ஆணையம் தொடங்கியது. இதற்காக 77,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் களத்தில் இறக்கப்பட்டனர்.

பீகார் மாநிலத்தின் 7.8 கோடி வாக்காளர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. முறையான சரிபார்ப்புக்குப் பிறகு, வெளிநாட்டினர் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தச் சூழ்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் இருப்பதாக கூறும் தேர்தல் ஆணையத்தின் இந்தக் குற்றச்சாட்டை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்களுடன் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், ‘தேர்தல் ஆணையம் தங்களுக்கு ‘ஆதாரம்’ கிடைத்ததாகக் கூறுகிறது. நாங்கள் அதை ‘சூத்ரா’வாகக் (ஆதாரமாக) கருதவில்லை, ‘மூத்ரா’வாகவே (சிறுநீர்) கருதுகிறோம். இந்தக் குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை.

மேலும், இந்த வாக்காளர் சரிபார்ப்புப் பணி என்பது கண் துடைப்பு நாடகம்; இதில் வெளிப்படைத்தன்மை இல்லை; பீகாரில் 80% வாக்காளர் படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால், எனது படிவமே என்னிடம் இருந்து பெறப்படவில்லை. பல இடங்களில் படிவங்கள் தூக்கி எறியப்படுகின்றன; சில இடங்களில் ஜிலேபி விற்கப் பயன்படுகின்றன. ஆன்லைன் சர்வர் பிரச்னைகள், ஓ.டி.பி. குளறுபடிகள் எனத் தொழில்நுட்பப் புகார்களும் கண்டுகொள்ளப்படவில்லை. இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையும் பாஜகவின் அறிவுறுத்தலின் பேரில் நடக்கிறது. தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறது. கடந்த தேர்தலில் எங்களது கூட்டணிக்கு 52 தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் வெறும் 5,000 வாக்குகளாக இருந்தது. இந்த சரிபார்ப்புப் பணி மூலம் ஒரு சதவீதம் வாக்காளர்களை நீக்கினால்கூட, பீகார் முழுவதும் சுமார் 7.9 லட்சம் பேர் வாக்களிக்கும் உரிமையை இழப்பார்கள். இது ஒரு தொகுதிக்குச் சராசரியாக 3,200 வாக்குகளைக் குறைக்கும்.

இதன் மூலம் ஏழை மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வாக்குகளைப் பறிக்கச் சதி நடக்கிறது’ என்று ஆவேசமாக கூறினார். இதே கூட்டத்தில் பேசிய இந்தியா கூட்டணியின் மற்றொரு தலைவர் முகேஷ் சஹானி, ‘தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை வாக்களிக்கும் உரிமைக்கு தடை விதிப்பதாகும். மேலும் இந்த நடவடிக்கையை, பணமதிப்பிழப்பு நடவடிக்கையுடன் ஒப்பிட முடியும்’ என்றார். பீகார் தேர்தலில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் தேர்தல் ஆணையம், அடுத்தாண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் இதேபோன்ற சரிபார்ப்புப் பணிகளை நடத்தத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.