Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போலி டாக்டர்களை மருத்துவம் பார்க்க அனுமதித்த மருத்துவமனை உரிமையாளர் கைது

பூந்தமல்லி: வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 போலி மருத்துவர்கள் பணி செய்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குனர் இளங்கோவன் தலைமையில் மருத்துவ துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அந்த தனியார் மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அகஸ்டின் (41), பரதன் (42) ஆகிய இருவர் போலி சான்றிதழ் மூலம், மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அகஸ்டின் மற்றும் பரதன் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அதில், அகஸ்டின் கடந்த 2003ம் ஆண்டு ரஷ்யாவில் மருத்துவம் பயின்றதாகவும், ஆனால் தொடர்ந்து இந்தியாவில் சிகிச்சை அளிப்பதற்கான பதிவு செய்து தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், தனியார் மருத்துவமனையில் 2 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது.

இதேபோல், பரதனிடம் விசாரித்தபோது சித்த மருத்துவராக சிகிச்சை அளித்து வந்துள்ளார். 2014ம் ஆண்டு வரை சிகிச்சை அளிப்பதற்காக சித்த மருத்துவ ஆணையத்தில் அனுமதி பெற்று இருந்ததாகவும் அதன் பின்னர், சிகிச்சை அளிப்பதற்கான அனுமதியை புதுப்பிக்காமலும் அலோபதி சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, உரிய சான்றிதழ்களின்றி மருத்துவம் பார்த்த அகஸ்டின் மற்றும் பரதன் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட தனியார் மருத்துவமனை உரிமையாளர் சரவணன் (39) என்பவரை நேற்று கைது செய்தனர்.