லாகூர்: பேஸ்புக் காதலியை திருமணம் செய்வதற்காக சட்ட விரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். அந்த பெண் திருமணம் செய்வதற்கு மறுத்த நிலையில் வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உபி மாநிலம் அலிகாரை சேர்ந்த பதல் பாபு என்பவருக்கு பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த சனா ராணி(21) என்ற பெண்ணுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அந்த, அந்த பெண்ணை பதல் பாபு காதலிக்கத் தொடங்கினார்.
பின்னர், நேரில் சந்தித்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து, கடந்த மாதம் 28ம் தேதி இந்திய எல்லை வழியாக பஞ்சாப் மாகாணம், மண்டி பஹூத்தின் மாவட்டத்தில் உள்ள சனா ராணியின் மவுங்க் கிராமத்துக்கு பதல் பாபு சென்றுள்ளார். அங்கு பதல் பாபுவை பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். முறையான ஆவணங்கள் எதுவும் இன்றி சட்ட விரோதமாக நாட்டிற்குள் வந்த அவரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் விசாரணையின் போது தன்னுடைய காதல் கதையை பதல் பாபு தெரிவித்துள்ளார்.
சனா ராணியிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். பதல் பாபுவை திருமணம் செய்ய தனக்கு விருப்பம் இல்லை என்று சனா ராணி கூறியுள்ளதாக போலீஸ் அதிகாரி நசீர் ஷா தெரிவித்தார். பதல் பாபுவை திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்று கூற சொல்லி அந்த பெண் நிர்பந்தப்படுத்தப்பட்டாரா என்பது குறித்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை. பதல் பாபுவுடன் உள்ள தொடர்பு குறித்து சனா ராணி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர் பதல் பாபுவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
* 16 ஆண்டுகளுக்கு பின் பாக். நபர் விடுதலை
பாகிஸ்தானை சேர்ந்தவர் முகமது மஸ்ரூப்(50) என்பவர் கடந்த 2008ம் ஆண்டு சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டு உபி மாநிலம் கோரக்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதான உளவு பார்த்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. குடியேற்ற விதிமீறல்களுக்காக மட்டும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். 16 ஆண்டு சிறை வாசத்துக்கு பின் வரும் பிப்ரவரி 7ம் தேதி மஸ்ரூப் விடுதலை செய்யப்பட உள்ளார் என கோரக்பூர் சிறை அதிகாரி குஷ்வாஹா நேற்று தெரிவித்தார்.


