Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கதை கட்டிய அமெரிக்க மீடியாக்கள் டிரம்ப் - புடின் தொலைபேசி உரையாடல் உண்மையல்ல: ரஷ்யா பகிரங்க மறுப்பு

வாஷிங்டன்: ‘அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினுடன் பேசியதாக வெளியான மீடியா தகவல்கள் உண்மையல்ல’ என ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு பல உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களில் பலரும் தனிப்பட்ட முறையில் டிரம்புடன் தொலைபேசி மூலமாகவும் பேசி வாழ்த்து தெரிவிக்கின்றனர். ஆனால் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஆரம்பத்தில் மவுனம் காத்தன. உக்ரைன் போரில் அமெரிக்கா, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவுவதால், அதிபர் டிரம்புக்கு ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்து தெரிவிக்காமல் இருந்தார்.

ஆனாலும், தேர்தல் முடிவு வெளியான ஒருநாளைக்கு பின்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புடின், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் டிரம்புக்கு வாழ்த்து கூறினார். இந்நிலையில், டிரம்ப், புடின் இடையே நேற்று முன்தினம் தொலைபேசி உரையாடல் நடந்ததாக அமெரிக்காவின் பிரபலமான தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டது. அப்போது, உக்ரைன் போரை மேலும் தீவிரப்படுத்தக் கூடாது என டிரம்ப், புடினிடம் கூறியதாக செய்திகள் வெளியாகின. ஏற்கனவே டிரம்ப் உக்ரைன் போரை நிறுத்துவதாக உறுதி அளித்துள்ளதால், பல அமெரிக்க மீடியாக்களிலும் டிரம்ப்-புடின் தொலைபேசி உரையாடல் குறித்து பல விதமான செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இத்தகவலில் எந்த உண்மையும் இல்லை என ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகை நேற்று மறுப்பு தெரிவித்தது. மாஸ்கோவில், கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் அளித்த பேட்டியில், ‘‘டிரம்ப், புடின் இடையே தொலைபேசி உரையாடல் நடந்ததாக வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை. அவை அனைத்தும் சுத்த கட்டுக்கதை. இதுவரை ரஷ்ய அதிபர், டிரம்புடன் தொலைபேசியில் பேசுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. சில சமயம் பிரபலமான மீடியாக்களில் கூட எந்தளவுக்கு தரமான செய்திகள் வெளியிடப்படுகின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம்’’ என்றார். டிரம்பின் தகவல் தொடர்பு இயக்குநர் ஸ்டீபன் செயுங், டிரம்ப், புடின் இடையேயான தனிப்பட்ட தொலைபேசி அழைப்பு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க மறுத்து விட்டார்.

* அடுத்த 30 நாட்களுக்கு கமலா ஹாரிஸ் அதிபர்?

அமெரிக்க துணை அதிபரின் முன்னாள் தகவல் தொடர்பு இயக்குநர் ஜமால் சிம்மன்ஸ் சிஎன்என் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘‘ஜோ பைடன் அற்புதமான அதிபராக இருந்தார். அவர் அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றினார். கடைசியாக ஒன்று பாக்கி உள்ளது. கமலா ஹாரிசை 47வது அதிபராக்குவேன் என கூறினார். அதையும் அவர் செய்ய வேண்டும். அதற்காக உடனடியாக பைடன் ராஜினாமா செய்து கமலாவை அதிபராக்க வேண்டும். அடுத்த 30 நாட்கள் கமலா ஹாரிஸ் அதிபராக பதவி வகிக்க வேண்டும். இதன் மூலம் முதல் பெண் அதிபர் என்கிற சுமையை இறக்கி வைக்க முடியும். அடுத்த முறை டிரம்பை எதிர்த்து கமலா கட்சியை வழிநடத்தவும் ஏதுவாக இருக்கும்’’ என்றார்.

* ‘இந்தியாவுக்கு திரும்பி போ’

துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் ஜனநாயக கட்சியின் முக்கிய நிதி திரட்டுபவரும், பிரசாரகருமாக இருந்த இந்திய வம்சவாளி அஜய் புடோரியா தனக்கு அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து இனவெறி மிரட்டல் வந்திருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். அவருக்கு வந்த எஸ்எம்எஸ்சில், ‘‘நீ ஒரு இந்தியன், அதனால் இந்தியர்களுக்கு மட்டுமே கவலைப்படுபவன் நீ. உன்னால் எப்படி அமெரிக்காவுக்கு சிறந்ததை தர முடியும். அமெரிக்காவில் பிச்சை எடுப்பதை நிறுத்து. இந்தியாவுக்கு திரும்பிப் போ. அங்கு போய் தலைவராகு’’ என கூறப்பட்டுள்ளது. இது ஜனநாயக கட்சியினரின் மிரட்டல் என புடோரியா கூறி உள்ளார்.

* எல்லை பொறுப்பாளராக டாம் ஹோமன் நியமனம்

புதிய அதிபர் டிரம்ப், தனது கடந்த ஆட்சியில் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்தின் முன்னாள் செயல் இயக்குநராக இருந்த டாம் ஹோமனை, நாட்டின் எல்லைகளுக்குப் பொறுப்பாளராக நியமித்துள்ளார். அமெரிக்காவின் வடக்கு, தெற்கு, கடல்சார், வான்வழி என அனைத்து எல்லைக்கும் டாம் ஹோமன் பொறுப்பாளராக இருப்பார் என டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்க எல்லையில் சட்டவிரோத குடியேற்றத்தை முற்றிலும் தடுப்பேன் என டிரம்ப் அளித்த வாக்குறுதி தான் அவருக்கு வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.