Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வெடிபொருள், எரிபொருளை பதுக்க லடாக் பாங்காங் ஏரி அருகே பதுங்கு குழி அமைத்த சீனா: செயற்கைகோள் படங்கள் மூலம் உறுதி

புதுடெல்லி: கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரிக்கு அருகே வெடிபொருள், எரிபொருளை பதுக்க பிரமாண்ட பதுங்கு குழிகளை தோண்டும் சீனா, கவச வாகனங்களை நிறுத்த தகர்க்க முடியாத மேற்கூரையுடன் கூடிய கட்டமைப்புகளையும் உருவாக்கி இருப்பது செயற்கைகோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி இந்தியா, சீனா இடையேயான அசல் எல்லைக் கோட்டை (எல்ஏசி) ஒட்டி அமைந்துள்ளது. இந்த ஏரியின் வடக்கு கரையில் மலைகளுக்கு மத்தியில் சிர்ஜாப் பகுதியில் உள்ள ராணுவ தளம், ஏரியைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ள சீன படைகளின் தலைமையகமாக உள்ளது. 2021-22ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த தளத்தில், பிரமாண்டமான பதுங்கு குழிகள் அமைப்பட்டிருப்பது அமெரிக்காவை சேர்ந்த பிளாக்ஸ்கை நிறுவனம் வெளியிட்ட செயற்கைகோள் புகைப்படம் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியாவால் உரிமைக் கோரப்பட்ட இப்பகுதி எல்ஏசியிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது. 2020ல் கல்வான் மோதல் நடக்கும் முன்பாக இப்பகுதி முற்றிலும் மனித நடமாட்டம் இல்லாத பகுதியாக இருந்து வந்தது. தற்போது அங்கு 8 நுழைவாயில்கள் கொண்ட பெரிய பதுங்கு குழியும், அதன் அருகே 5 நுழைவாயில்கள் கொண்ட பதுங்கு குழியையும் சீன ராணுவம் ஏற்படுத்தி உள்ளது. வெடிபொருட்கள் மற்றும் எரிபொருளை பத்திரமாக பதுக்கி வைக்க இந்த பதுங்கு குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

இதுதவிர, கவச வாகனங்கள் மீது வான் வழி தாக்குதல் நடப்படாமல் நிறுத்தி வைக்க தகர்க்க முடியாத மேற்கூரையுடன் கூடிய நிறுத்துமிடங்களும் கட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் செயற்கைகோள் புகைப்படத்தில் வெளிவாக தெரிகிறது. இந்த செயற்கைகோள் படங்கள் கடந்த மே 30ம் தேதி எடுக்கப்பட்டவை. தலைமையகத்திற்கான பல பெரிய கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன. இந்த செயற்கைகோள் படங்கள் குறித்து இந்திய அதிகாரிகளிடம் இருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை. சீனா பதுங்கு குழிகள் கட்டியுள்ள இடம் கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து சுமார் 120 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

பாங்காங் ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் பணியாற்றிய முன்னாள் இந்திய ராணுவ தளபதி ஒருவர் அளித்த பேட்டியில், ‘‘நிலத்தடி கட்டமைப்புகளை சீனா அதிக அளவில் உருவாக்குவது தீவிரமானது. இன்றைய போர்க்களத்தில், செயற்கைக்கோள் அல்லது வான்வழி கண்காணிப்பு அமைப்புகளை பயன்படுத்தி எல்லாவற்றையும் துல்லியமாகக் கண்டறிய முடியும். லடாக்கில் இந்திய பகுதியில் இத்தகைய நிலத்தடி பதுங்கு குழிகள் இல்லை.  இதற்கு மாற்றாக சுரங்கப்பாதைகள் அமைப்பதே சிறந்த வழி. சுரங்கப்பாதைகளை அமைப்பது எளிதானது, செலவு குறைந்தது. இதை செய்யத் தவறினால், அதிக வான் பாதுகாப்பு உபகரணங்களில் நாம் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்’’ என்றார்.

கடந்த 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா, சீனா ராணுவ வீரர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவின் லடாக் எல்லையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. ஆயுதங்களை விரைவாக எல்லைக்கு கொண்டு செல்ல இந்தியா தனது எல்லைப் பகுதிகளில் பல்வேறு சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாதைகள், விமானநிலையங்கள் மற்றும் ஹெலிபேடுகளை கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.