விரிவாக்கம் செய்யப்படாததால் பயனில்லை என்று அதிருப்தி 8 ஆண்டாகியும் பெயரளவில் செயல்படும் சாத்தான்குளம் போக்குவரத்து பணிமனை
* முக்கிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்காததால் கிராம மக்கள் தவிப்பு
* 20 புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை துவங்குவது எப்போது?
சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் போக்குவரத்து கழக பணிமனை தொடங்கப்பட்டு 8 ஆண்டுகளாகியும் இன்னும் விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது.
இதனால் கோவை, மதுரை, திருப்பூர், சேலம், ஈரோடு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சாத்தான்குளம் தாலுகா பகுதியில் போக்குவரத்து கழக பணிமனை அமைக்க அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சாத்தான்குளம் -நாசரேத் சாலையில் உள்ள கல்லாங்குத்து என்ற இடத்தில் போக்குவரத்து கழக பணிமனை அமைக்கப்பட்டது.
இதனை கடந்த 2017ம் ஆண்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது 7 பேருந்துகளுடன் பணிமனை செயல்பட்டு வந்தது. தற்போது ஒரு மாற்றுப்பேருந்து உள்ளிட்ட 13 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 6 டவுன் பஸ்களும், 6 புறநகர் பேருந்துகளும் அடங்கும். அவை முறையே தூத்துக்குடி, திருச்செந்தூர், நெல்லை, திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.
பணிமனை தொடங்கப்பட்ட போது சாத்தான்குளம் பகுதியில் இருந்து அனைத்து நகரங்களுக்கும் மற்றும் கிராமங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் போக்குவரத்து கழக பணிமனை எந்த முன்னேற்றமும் இல்லாமல் பெயரளவிலேயே இயங்கி வருகிறது. 20 புதிய பேருந்துகள் புதிய வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அதுவும் இயக்கப்படாமலேயே கிடப்பில் உள்ளது. 8 ஆண்டுகளாகியும் சாத்தான்குளம் பணிமனை விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளதால் இங்கிருந்து முக்கிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. குறிப்பாக, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் பகுதிகளுக்கு பேருந்துகள் இல்லாததால் தூத்துக்குடி, நெல்லைக்கு சென்று பயணிக்க வேண்டிய சூழலில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியை சேர்ந்தவர்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை பகுதியில் வியாபாரம் ரீதியாக உள்ளனர். எனவே அவர்கள் வந்து செல்லும் வகையில் சாத்தான்குளம் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே திருச்செந்தூர் பகுதியில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதியுள்ளது. எனவே திருச்செந்தூர் வழியாக கோவை, திருப்பூர் பகுதிக்கு பேருந்து சேவை தொடங்க வேண்டுமென இப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதுகுறித்து சாத்தான்குளம் வர்த்தக சங்க தலைவர் அப்பு கண்ணன் கூறுகையில், போக்குவரத்து கழக பணிமனை தொடங்கப்பட்டு எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. உரிய பஸ் இயக்கப்படாமல் இதனை டயர் வைக்கும் கம்பெனியாக மாற்ற முடிவு செய்தனர். இதற்கு வியாபாரிகள் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுக்கு மனு அனுப்பி போராட்டமும் நடத்தினோம். அதன்பின் அத்திட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் அதன் பின்பும் தேவையான பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது. குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்படுகிறது. அதனால் அரசு அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி சாத்தான்குளம் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து கோவை, திருப்பூர் ஈரோடு சேலம் மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பகுதியில் உள்ள வியாபாரிகள் இந்த ஊருக்கு செல்ல தனியார் பேருந்து மற்றும் நெல்லை, தூத்துக்குடி பகுதிக்கு சென்று பயணிக்கும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
மேலும் சாத்தான்குளம் அரசு போக்குவரத்து கழக பணிமனை, சாத்தான்குளம் ஒன்றியம் அமுதுண்ணாக்குடி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பணிமனைக்காக ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிப்பணம் பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் பணிமனைக்கு வரக்கூடிய சாலை வசதி மற்றும் தெருவிளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. எனவே போக்குவரத்துறை அதிகாரிகள் அதற்கு தீர்வு கண்டு உடனடியாக அமுதுண்ணாக்குடி ஊராட்சி மூலம் முறையான சாலை வசதி செய்து பணிமனைக்கு வரும் வழியில் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை, கோவைக்கு இயக்கிய பஸ்கள் நிறுத்தம்
வர்த்தக சங்க செயலாளர் செல்வராஜ் மதுரம், கூறுகையில், ‘சாத்தான்குளத்தில் இருந்து கோவை, சென்னை பகுதிக்கு அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. இதனால் மக்கள் பயனடைந்து வந்தனர். கொரோனா காலக்கட்டத்தில் இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அதன் பின்பு இயல்புநிலை திரும்பியும் இந்த பேருந்துகள் இன்னும் இயக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் இன்னும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் இப்பகுதி மக்கள் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கு நெல்லைக்கு சென்று பயணிக்கின்றனர். அரசு பேருந்துகள் இப்பகுதியில் இருந்து இயக்கப்படாததால் இப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தனியார் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
ஆதலால் அரசுத்துறை அதிகாரிகள் இதனை கவனித்து சாத்தான்குளம் பகுதியில் இருந்து நிறுத்தப்பட்ட சென்னை, கோவை பகுதிகளுக்கு இயக்கப்பட்ட அரசு விரைவு பேருந்துகளை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
விஷ ஜந்துகளால் ஊழியர்கள் அச்சம்
தற்போது போக்குவரத்து கழக பணிமனைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பணிமனைக்கு செல்லும் வழியில் மின்விளக்கு வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் பணிமனைக்கு செல்லும் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே செல்ல வேண்டியது உள்ளது.
பணிமனையை சுற்றி காம்பவுண்ட் சுவர் அமைக்கப்படாமல் உள்ளதால் தெரு நாய்கள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளும், விஷ ஜந்துக்களும் பணிமனைக்கு உள்ளே புகுந்து விடுவதாக ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே போக்குவரத்து கழக பணிமனை செல்லும் வழியில் சாலை அமைக்க வேண்டும். பணிமனையை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்ட வேண்டுமென்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழை பெய்தால் குளமாக மாறும்
போக்குவரத்து கழக பணிமனை வயல்வெளி பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளதால் சாத்தான்குளம் பகுதியில் எப்போது மழை பெய்தாலும் பணிமனையில் குளம்போல் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் பஸ் நிறுத்துவது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகிறது.
மேலும் மழைநீர் பணிமனைக்கு செல்லும் வழியில் சாலை வசதி இல்லாததால் அங்கும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. பணிமனையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


