கூடலூர்: கூடாலூரி வணிகர் சங்க நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ₹3.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கூடலூரை அடுத்துள்ள மதுரை ஊராட்சிக்குட்பட்ட கம்மாத்தி பகுதியில் வசிப்பவர் தொம்மி (எ) ஏ.ஜே.தாமஸ். வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர். மதுரை ஊராட்சியின் முன்னாள் தலைவரும் ஆவார்.
விவசாய தொழில் மற்றும் வியாபாரம் உள்ளிட்டவை செய்து வரும் இவரது வீட்டில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 12 மணியளவில் 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்குப் பின் 3 அதிகாரிகள் சில ஆவணங்களை அங்கிருந்து காரில் எடுத்து சென்றனர். தாமசின் மகன் சிரில் என்பவரை காரில் அழைத்து வெளியே சென்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், அதிகாரிகள் கூடலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் அவரது வங்கிக் கணக்குகள் குறித்து விபரம் சேகரித்து உள்ளனர். தாமசின் ஹார்டுவேர் நிறுவனத்தில் கணக்கு வழக்குகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த சோதனை நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது.
இந்தநிலையில் மீண்டும் நேற்று காலை தொடங்கி சோதனை மாலை 4 மணி வரை நடந்தது. இந்த சோதனையில் சில ஆவணங்கள் அடங்கிய சிறிய பைகள் மற்றும் கணக்கில் வராத ₹3.25 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாமஸிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘வியாபாரம், நில ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு சம்பந்தமான ஆவணங்களை கொண்டு சென்றதாகவும், பணம் எதுவும் தனது வீட்டில் இருந்து அதிகாரிகள் எடுத்துச் செல்லவில்லை,’ என்று தெரிவித்துள்ளார்.