Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு ‘ஈடி’ கஸ்டடியில் காங்கிரஸ் மாஜி அமைச்சர் விசாரணை: கர்நாடகாவில் பரபரப்பு

பெங்களூரு: வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சிக் கழகத்தின் நிதியை மோசடி செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பின்னணியில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பி.நாகேந்திராவை கைது செய்த அமலாக்கத்துறை, வரும் 18ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்கிறது. கர்நாடக அரசின் மகரிஷி வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்து சட்ட விரோதமாக வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 187 கோடி நிதி மாற்றப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே வளர்ச்சிக் கழகத்தின் நிதி கண்காணிப்பாளர் சந்திரசேகரன் மே 26ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அப்போது, அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்து குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவரான பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த பி.நாகேந்திரா, தனது பதவியை ஜூன் 6ம் தேதி ராஜினாமா செய்தார்.

மாநில அரசின் உத்தரவின் பேரில், இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்வதற்கு உதவியாக இருந்த யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா அளித்த புகாரின் பேரில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்குத் தொடர்பாக 11 பேரை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. இதுவரை ரூ. 14.5 கோடி மீட்கப்பட்டுள்ளது. பெங்களூரில் முன்னாள் அமைச்சர் பி.நாகேந்திரா, வளர்ச்சிக் கழகத்தின் தலைவரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான பசனகவுடா தத்தால் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் வழக்குத் தொடர்பான முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

சோதனைகளின்போது கர்நாடக போலீசாருக்குப் பதிலாக, மத்திய ஆயுத காவல் படையின் பாதுகாப்பை அமலாக்கத் துறை பெற்றிருந்தது. இந்நிலையில் கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான நாகேந்திரனை நேற்று அமலாக்கத்துறை கைது செய்தது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை வரும் 18ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.