ஜுரிச்: யூரோ 2025 மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் நேற்று, நார்வே அணி அபார வெற்றி பெற்றது. ஐரோப்பிய நாடுகளின் அணிகள் மோதும் யூரோ 2025 மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள், சுவிட்சர்லாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த லீக் சுற்று போட்டி ஒன்றில் நார்வே, ஐஸ்லாந்து மகளிர் அணிகள் மோதின. துவக்கம் முதல் துடிப்புடன் செயல்பட்ட நார்வே அணி வீராங்கனைகளின் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆக்ரோஷமாக ஆடிய அந்த அணியின் சிக்னே காப்செட், 15 மற்றும் 26வது நிமிடங்களில் 2 கோலடித்து அசத்தினார்.
அதே அணியின் மற்றொரு வீராங்கனை ஃப்ரிடா மானும், 49 மற்றும் 76வது நிமிடங்களில் 2 கோல் போட்டார். அதற்கு பதிலடியாக ஐஸ்லாந்து அணி வீராங்கனைகள் ஸ்வென்டிஸ் ஜேன் ஜாய்ன்ஸ்டாடிர் 6வது நிமிடத்திலும், ஹின் எரிக்ஸ்டாடிர் 84வது நிமிடத்திலும், க்ளோடிஸ் பெரியா விக்ஸ்டாடிர் 90+5வது நிமிடத்திலும் 3 கோல் போட்டனர். அதனால், நார்வே அணி, 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது. மற்றொரு போட்டியில் ஃபின்லாந்து, சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் மட்டுமே போட்டதால் ஆட்டம் டிரா ஆனது.


