ஈரோட்டில் திட்டமிட்டபடி 18ம் தேதி பொதுக்கூட்டம் விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம்: செங்கோட்டையன் அழைப்பு
ஈரோடு: விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம் என செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே தவெக தலைவர் விஜய் வரும் 18ம் தேதி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்பதால், முறையான அனுமதி பெறாததால் பிரசார கூட்டத்தை அனுமதிக்க கூடாது என மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோருக்கு அறநிலையத்துறை கடிதம் அனுப்பி இருந்தது. இந்நிலையில், தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நேற்று கட்சியினருடன் தவெக தலைவர் பிரசாரம் மேற்கொள்ளும் இடத்தில் முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து செங்கோட்டையன் அளித்த பேட்டி: விஜய் வருகிற 18ம் தேதி காலை 11 மணி முதல் 1 மணிக்குள் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இந்த கூட்டத்திற்கு அரசு அலுவலர்கள் கேட்டதற்கு ஏற்ப பணிகளை செய்து வருகிறோம். நிபந்தனைகளை நிறைவேற்றி தருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். புதுவையை தொடர்ந்து தமிழகத்திற்கு விஜய் வருகிறார். விஜய்யை முதல்வராக ஏற்கும் எந்த இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் வருபவர்கள் அத்தனை பேரையும் அன்போடு அரவணைத்து செல்வது என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதே நேரத்தில் யாரை கூட்டணியில் வைத்துக் கொள்வது என்பதை தலைவர் முடிவு செய்வார்.
காவல்துறையினரால் விதிக்கப்பட்ட 84 நிபந்தனைகள் தற்போது மாறிவிட்டது. தற்போது எந்த நிபந்தனைகளும் இல்லை. இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து எங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படவில்லை. இந்த இடம் முழுமையாக கோயிலுக்கு சொந்தமானது என உயர்நீதிமன்றத்தில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவெக அதிமுகவாக மாறும் என நான் கூறவில்லை. தவெகவில் பலபேர் இணைகின்ற வாய்ப்பு உள்ளது. ஈரோடு தவெக கூட்டத்தில் யாரெல்லாம் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். பிரசார கூட்டம் நடத்துவதற்கு தவெகவுக்கு எந்தவிதமான தடையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


