Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது

ஈரோடு: விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. 6 மணிக்கு முன்னாள் வந்தவர்வகளுக்கு மட்டும் டோக்கன் அடைப்படையில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்.8ம் தேதி எண்ணப்படுகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 64.02% வாக்குகள் பதிவாகி உள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி கடந்த மாதம் 7ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 10ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெற்றது. இதில், கடந்த 20ம் தேதி அறிவிக்கப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியலின்படி, திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளராக சீதாலட்சுமி, இதர கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 46 பேர் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு விறுவிறுப்புடன் தொடங்கியது. இத்தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 பேர், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 37 பேர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 பேர் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. 46 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் காலை 5.30 மணி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

தொடர்ந்து வாக்குச்சாவடி முகவர்களின் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான மாதிரி வாக்குகள் அனைத்தும் அழிக்கப்பட்டது. காலை 7 மணி முதல் பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். தேர்தலில் முதன் முறை வாக்காளர்கள், தம்பதிகள், முதியவர்கள், இளம்பெண்கள், இளைஞர்கள் வாக்களிக்க வந்தனர். குறிப்பாக இளம் தலைமுறையினர் ஆர்வத்துடன் தங்களது பெற்றோருடன் வந்து வாக்களித்தனர்.

திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தனது குடும்பத்துடன் வந்து சூரம்பட்டி நால்ரோடு அருகே உள்ள பிவிபி பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். ஈரோடு திருமகன் ஈவெரா சாலையில் உள்ள துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் மறைந்த கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மனைவி வரலட்சுமி, அவரது மகன் சஞ்சய் சம்பத் ஆகியோர் வாக்களித்தனர்.

ஈரோடு சம்பத் நகர் அம்மன் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வாக்களித்தார். காலை 9 மணி நிலவரப்படி 10.95 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டிருந்ததால் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் கூடுதலாக துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. 6 மணிக்குள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வருபவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்தும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்டு ஸ்ட்ராங் ரூமில் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் வைக்கப்பட உள்ளது. வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை ஈரோடு பெருந்துறை ரோடு, ஐஆர்டிடி கல்லூரியில் நடைபெற உள்ளது.