Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாஜக எம்எல்ஏவின் மருமகன்.. ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் சொத்து மதிப்பு ரூ.583 கோடி

ஈரோடு : ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பெயரிலும், மனைவி பெயரிலும் ரூ.653 கோடி சொத்துக்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொடக்குறிச்சி பா.ஜ.க. எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மருமகனான ஆற்றல் அசோக்குமார், அதிமுக வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். 2021 முதல் பா.ஜ.க.வில் கட்சி பணியாற்றிய அசோக்குமார் பா.ஜ.க. மாநில ஓ.பி.சி. அணி தலைவராக பதவி வகித்தவர். மேலும் பா.ஜ.க.வில் இருந்து விலகி நவம்பரில் அதிமுகவில் இணைந்த அசோக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ கோபால் சுன்கராவிடம், நேற்று அசோக்குமார் தாக்கல் செய்தார். இத்துடன் அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அவரது சொத்து மதிப்பு, கடன் மற்றும் கல்வித் தகுதி உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தன்னை சமூக சேவகர் மற்றும் தொழிலதிபர் என அசோக்குமாரும், அவரது மனைவி கருணாம்பிகா குமார் கட்டுமான வடிவமைப்பாளர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அந்த பிரமாண பத்திரத்தில், "ஆற்றல் அறக்கட்டளை நடத்தி வரும் அசோக்குமார் பெயரில் மட்டும் ரூ.526 கோடிக்கு அசையும் சொத்துகள் உள்ளன. அசோக்குமார் மனைவி கருணாம்பிகா குமார் பெயரில் ரூ.47 கோடிக்கு அசையும் சொத்துகள் உள்ளன. அசோக்குமார் பெயரில் ரூ.57 கோடிக்கு அசையா சொத்துகளும் மனைவி பெயரில் ரூ.22 கோடிக்கு அசையா சொத்துகளும் உள்ளன.ரூ.653 கோடி வைத்துள்ள அசோக்குமாருக்கு சொந்தமாக ஒரு கார், பைக் கூட இல்லை," என தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அசோக்குமாரின் அசையும் சொத்துகள் பெரும்பாலானவை வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்களில் வைப்பீட்டு தொகையாக உள்ளன. அசோக்குமார் மற்றும் அவரது மனைவியிடம் தலா 10 கிலோ தங்கம் இருப்பதாகவும் பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மட்டுமின்றி திண்டுக்கல், கோவை, தாராபுரம் உள்ளிட்ட பல இடங்களில் அசோக்குமாருக்கு அசையா சொத்துகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.