Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஈரோட்டில் வரும் 18ம் தேதி நடைபெற உள்ள விஜய் பிரசாரத்துக்கு போலீஸ் அனுமதி: அதிமுகவுடன் தவெக கூட்டணியா..? செங்கோட்டையன் பாபரப்பு பேட்டி

ஈரோடு: ஈரோட்டில் வரும் 18ம் தேதி நடைபெற உள்ள விஜய் பிரசாரத்துக்கு போலீஸ் அனுமதி வழங்கி உள்ளது. இந்த இடத்தை ஆய்வு செய்த செங்கோட்டையன், அதிமுக-தவெக கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு பரபரப்பு பதில் அளித்து உள்ளார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்துள்ள சரளையில் வருகிற 18ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக அனுமதி கேட்டு தவெக சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகத்தில் கடந்த 9ம் தேதி மனு அளித்திருந்தனர். கூட்டத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், மாவட்ட காவல்துறை நிபந்தனைகளை விதித்திருந்தது. இந்நிலையில் கூட்டம் நடத்த தேர்வு செய்யப்பட்ட இடமான 31 ஏக்கரில் 19 ஏக்கர் நிலம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலம் என்பதால் அனுமதி வழங்க கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் போலீசாருக்கு கடிதம் அனுப்ப பட்டிருந்தது. இதையடுத்து தவெக தரப்பில் இந்து சமய அறநிலையத்துறையிடம் நிலத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டு மனு அளித்தனர். இதற்கு இந்து சமய அறநிலையத்துறையானது 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் வாடகை நிர்ணயித்தது‌. அத்தொகை செலுத்தப்பட்டதால் இந்து அறநிலையத்துறை ஆட்சேபனையை விலக்கி கொண்டது. இதனையடுத்து, போலீஸ் அனுமதி அளித்துள்ளனர். இதனிடையே விஜய் பிரசாரம் மேற்கொள்ளும் இடத்தை எஸ்பி சுஜாதா நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

இந்நிலையில் நேற்று செங்கோட்டையன் சரளையில் பிரசார கூட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தவெக தலைவர் விஜய் வரும் 18ம் தேதி பெருந்துறையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அன்று காலை 11 மணியிலிருந்து 1 மணிக்குள் அவரது உரை இருக்கும். பெருந்துறையில் பிரசார கூட்டத்திற்கான பணி தொடங்கப்பட்டு விட்டது. தவெகவில் விருப்ப மனு பெறும் தேதி குறித்து விஜய் அறிவிப்பார். விருப்ப மனு பெறப்பட்ட பிறகு வேட்பாளர் பட்டியலை விஜய் அறிவிப்பார். விஜய் பிரசார கூட்டம் நடத்த போலீஸ் தரப்பில் விதிக்கப்பட்ட 84 நிபந்தனைகளில் சில நிபந்தனைகள் தற்போது மாறிவிட்டது‌.

தேஜ கூட்டணியில் சசிகலாவை இணைப்பதற்காக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை குறித்து அவர்களிடம் தான் கேட்கவேண்டும். தேர்தல் களம் எவ்வாறு செல்லும் என்பதை எவராலும் கணிக்க முடியாது. பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தவெக-அதிமுக கூட்டணி அமையுமா என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும். தவெகவிற்கு போட்டி என்று யாரையும் சொல்லவில்லை. தனிப்பட்ட முறையில் யார் போட்டி என கருத்து சொல்லமுடியாது. தவெகவிற்கு மக்கள் சக்தி உள்ளது‌. மக்கள் சக்தியால் விஜய் முதல்வராவது உறுதி. இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

முன்னதாக செங்கோட்டையன் முன்னிலையில், அதிமுக நிர்வாகி அருணாச்சலம் தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்.

அதிமுகவில் பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார்; செங்கோட்டையனை தோற்கடிப்பேன்: அண்ணன் மகன் சபதம்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் கே.கே.செல்வன் கடந்த வாரம் அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து கோபியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 53 ஆண்டுகளாக செங்கோட்டையனுடன் பயணித்து வந்தோம். அவர் எடுத்த தவறான முடிவால் நான் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளேன். செங்கோட்டையன் ஏராளமான கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், உறவினர்கள் பலரிடம் பணம் பெற்று ஏமாற்றி உள்ளார். விரைவில் அந்த பட்டியலை வெளியிட உள்ளேன்.

1977ல் சத்தியமங்கலம் தொகுதியில் செங்கோட்டையன் போட்டியிட்டார். 1980ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எங்கள் தாத்தா, அவரது சித்தப்பா சுப்பிரமணியத்தை எதிர்த்து செங்கோட்டையன் கோபி தொகுதியில் போட்டியிட்டு அவரை தோற்கடித்தார். இதனால் உறவில் விரிசலை ஏற்படுத்தினார். அதிமுகவில் 8 முறை எம்எல்ஏவாக இருந்த செங்கோட்டையன் இந்த தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. கோபிசெட்டிபாளையத்தை தனி மாவட்டமாக கூட அவர் கொண்டு வரவில்லை. வரும் தேர்தலில் செங்கோட்டையனை எதிர்த்து போட்டியிட அதிமுகவில் வாய்ப்பு கிடைத்தால் 1980ம் ஆண்டு வரலாறு மீண்டும் திரும்பும். இவ்வாறு அவர் கூறினார்.