லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி, 108 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 371 ரன் குவித்துள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த 2 டெஸ்ட்களில், இந்தியா, இங்கிலாந்து அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில், 3வது டெஸ்ட் போட்டி, லண்டன் மாநகரில் லார்ட்ஸ் அரங்கில் கடந்த 10ம் தேதி துவங்கியது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 387 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பின்னர், முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில், நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியின் கே.எல்.ராகுல், துணை கேப்டன் ரிஷப் பண்ட் அற்புதமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
4வது விக்கெட்டுக்கு இந்த இணை 141 ரன் குவித்திருந்த நிலையில், ரிஷப் பண்ட் (74 ரன்) ரன் அவுட்டானார். சிறிது நேரத்தில் சதம் விளாசிய ராகுல் 100 ரன்னில் ஷொயப் பஷீர் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி இணை சேர்ந்து பொறுப்புடன் ஆடினர். 108 ஓவரில், இந்தியா, 6 விக்கெட் இழப்புக்கு 371 ரன் எடுத்து, 16 ரன் பின் தங்கி இருந்தது. வாஷிங்டன் சுந்தர் 17, ஜடேஜா 71 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.