பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில்லின் அதிரடி சதத்தால் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 427 ரன்னுக்கு டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்ட், பர்மிங்காம் நகரில் கடந்த 2ம் தேதி முதல் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்தியா, முதல் இன்னிங்சில் 587 ரன் குவித்தது. அதற்கு பதிலடியாக இங்கிலாந்து அணி 407 ரன் எடுத்தது. இதையடுத்து 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழந்து 64 ரன் எடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று 4ம் நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் கருண் நாயர் 26 ரன்னிலும், கே.எல். ராகுல் 55 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின் இணை சேர்ந்த கேப்டன் சுப்மன் கில்லும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டும் அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றினர். இந்த இணை 110 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 65 ரன்னில் பண்ட் அவுட்டானார். தொடர்ந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கில், 130 பந்துகளை எதிர்கொண்டு, 8வது சதம் விளாசினார். பின், 162 பந்துகளில் 8 சிக்சர், 13 பவுண்டரிகளுடன் 161 ரன் எடுத்திருந்தபோது கில் அவுட்டானார். 83 ஓவர் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 427 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. அப்போது இந்தியா 607 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ஜடேஜா 69, வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டின் 2வது இன்னிங்சில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், 22 பந்துகளில் 28 ரன் எடுத்தார். அவர் 10 ரன்களை எடுத்தபோது, டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். மேலும், தனது 21வது டெஸ்ட் போட்டியில் 2000 ரன் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதனால், சுனில் கவாஸ்கரின் 49 ஆண்டு கால சாதனை (23 போட்டிகள்) தகர்த்தெறியப்பட்டது. இந்த சாதனைப் பட்டியலில் கவுதம் காம்பிர் (24 டெஸ்ட்), வீரேந்தர் ஷேவாக் (25 போட்டி) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தவிர, குறைந்த இன்னிங்ஸ்களில் 2000 ரன் குவித்த சாதனையாளர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராகுல் டிராவிட், ஷேவாக்குடன், ஜெய்ஸ்வால் (40 இன்னிங்ஸ்) இணைந்துள்ளார். இந்த பட்டியலில், விஜய் ஹசாரே, காம்பிர் (43 இன்னிங்ஸ்), சுனில் கவாஸ்கர், டெண்டுல்கர் (44 இன்னிங்ஸ்), சவுரவ் கங்குலி (45 இன்னிங்ஸ்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.


