வொர்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது ஒரு நாள் போட்டியில் இந்திய இளையோர் கிரிக்கெட் அணி, சொதப்பலாக ஆடி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 210 ரன் எடுத்தது.
19 வயதுக்கு உட்பட்ட இந்திய இளையோர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டிகளில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த 4 போட்டிகளில் இந்தியா 3ல் வென்று தொடரை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில், கடைசி ஒரு நாள் போட்டி வொர்செஸ்டர் நகரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற, ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
துவக்க வீரராக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே 1 ரன்னில் வீழ்ந்து மோசமான துவக்கத்தை தந்தார். பின் வந்த விஹான் மல்ஹோத்ராவும் ஒரு ரன்னில் அவுட்டானார். நம்பிக்கை நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி 42 பந்துகளில் 33 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பின் வந்தோரில் அம்பரீஷ் பொறுப்புடன் ஆடி 81 பந்துகளில் 66 ரன் எடுத்தார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி, 9 விக்கெட் இழந்து 210 ரன் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் அலெக்ஸ் பிரென்ச், ரால்பி ஆல்பர்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 211 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.


