Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இங்கிலாந்து பந்துவீச்சு அவ்வளவு சிறப்பாக இல்லை; டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு: ஹைடன் சொல்கிறார்

மும்பை: விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஷ்வின் என மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தநிலையில் இங்கிலாந்துடன் அதன் சொந்த மண்ணின் மோத உள்ள டெஸ்ட் தொடருக்கு 25 வயதான சுப்மன் தலைமையில் பெரும்பாலும் அனுபவமற்ற 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி உடற்தகுதி காரணங்களால் அணியில் இடம்பெறவில்லை. இதனிடையே இங்கிலாந்து தொடருக்கு பல மூத்த வீரர்கள் இல்லாமல் இந்தியா விளையாட உள்ளதால், இங்கிலாந்து அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், தான் அப்படி நினைக்கவில்லை எனவும், இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றே நினைக்கிறேன். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக முன்னணி வீரர்கள் இடம்பெறவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களான மார்க் வுட், ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் ஆட்கின்சன் ஆகியோர் முதல் டெஸ்டுக்கான 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் இடம்பெறவில்லை. மேலும், மார்க் வுட் முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வருவதால், குறைந்தபட்சம் முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் அவர் களமிறங்க மாட்டார் என்று தெரிகிறது.

ஜோப்ரா ஆர்ச்சர், கட்டைவிரல் காயத்திலிருந்து மீண்டு வருவதால், 2வது டெஸ்டுக்கான அணியில் இடம்பெறக் கூடும். ஆட்கின்சன் காயத்திலிருந்து மீண்டு வருகிறார். அவர் குறித்த தெளிவான தகவல் இல்லை. இங்கிலாந்து அணி, ஹெடிங்லி டெஸ்டுக்கு ஜோஷ் டங், சாம் குக், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகிய 5 வேகப்பந்து வீச்சாளர்களை அணியில் தேர்ந்தெடுத்துள்ளது. ஷோயப் பஷீர் அணியில் ஒரே சுழற்பந்து வீச்சாளராக உள்ளார்,

ஜோ ரூட் மற்றும் ஜேகப் பெத்தல் உள்ளிட்டோர் தேவைப்பட்டால் பகுதி நேரமாக பந்து வீசலாம். எனவே இங்கிலாந்து பந்துவீச்சை ஒப்பிட்டு பார்க்கையில் இந்திய பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் சுதாரித்து ஆடினால் தொடரை கைப்பற்ற நல்ல வாய்ப்பிருக்கிறது. என்று ஹைடன் கூறினார்.