அவசர நிலை இருண்ட அத்தியாயம் எமர்ஜென்சியை பிரகடனப்படுத்திய இந்திரா காந்திக்கு மக்கள் தண்டனை அளித்தனர்: காங். எம்பி சசி தரூர் விமர்சனம்
புதுடெல்லி: திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் அண்மை காலங்களில் பிரதமர் மோடியின் புகழ் பாடி வருகிறார். அவரது இந்த கருத்து கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த 1975ம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை பிரகடனத்தை சசி தரூர் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். ஒரு மலையாள பத்திரிகையில் சசி தரூர் கட்டுரை எழுதியுள்ளார். அதில், அவசர நிலை என்பது இந்தியாவின் இருண்ட அத்தியாயம். இந்திரா காந்தியின் இரண்டாவது மகனான சஞ்சய் காந்தியின் கட்டாய கருத்தடை பிரசாரங்கள், குடிசைகளை இரக்கமின்றி இடித்தது மோசமான செயல்.
ஒழுங்குக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் கொடூரமானதாக மாறியதை ஏற்க முடியாது. கருத்து சுதந்திரத்தை ஒடுக்குதல், சுதந்திரமாக எழுதவும், பேசுவதற்கான உரிமைகள் மறுக்கப்படுவது போன்ற அடிப்படை உரிமைகள் குறைக்கப்பட்டது நாட்டின் அரசியலில் ஆறாத வடுவை ஏற்படுத்தி விட்டது. அவசர நிலைக்கு பின்னர் 1977ல் நடந்த பொது தேர்தலில் இந்திரா காந்தி மற்றும் அவரது கட்சியை தோற்கச் செய்து மக்கள் தெளிவான பதில் அளித்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
* பறவை கிளியாக மாறுகிறதா? மாணிக்கம் தாகூர் கிண்டல்
சசி தரூரின் இந்த கட்டுரை வெளியான நிலையில் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், ஒருவர் பாஜவின் வரிகளை வார்த்தைக்கு வார்த்தை சொல்ல தொடங்கும் போது அனைவரும் ஆச்சரியப்பட தொடங்குகிறார்கள்- பறவை கிளியாக மாறுகிறதா? பறவைகள் மிமிக்ரி செய்வது நன்றாக இருக்கும், அது அரசியலில் அல்ல என கிண்டல் அடித்துள்ளார். கடந்த மாதம் பிரதமர் மோடியை சசி தரூர் புகழ்ந்த போது, சசி தரூரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டித்திருந்தார். அதற்கு, சசி தரூர் தனது வலை பக்கத்தில் பறவையின் படத்தை பகிர்ந்து பறப்பதற்கான அனுமதி கேட்காதீர்கள். சிறகுகள் உங்களுடையது. வானம் யாருக்கும் சொந்தம் இல்லை என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.