Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தகுதியானவர்கள் மட்டுமே வாக்களிக்க வாக்காளர் பட்டியலை திருத்துவது அவசியம்: தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடெல்லி: பீகார் சட்டப்பேரவை தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடக்க உள்ள நிலையில், மகாராஷ்டிரா போல பீகாரிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இது மாநில அரசு இயந்திரத்தை பயன்படுத்தி வேண்டுமென்றே வாக்காளர்களை அதிகளவில் சேர்ப்பது அல்லது நீக்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. இதே போல மகாராஷ்டிராவிலும் தேர்தலுக்கு முன்பாக குறிப்பிட்ட சில தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது.

இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை குறித்து தலைமை தேர்தல் ஆணையம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாக்காளர் பட்டியல் என்பது மாறக் கூடிய பட்டியல். இறப்புகள், இடம் பெயர்வு, 19 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை சேர்ப்பதன் காரணமாக வாக்காளர் பட்டியல் மாறிக் கொண்டே இருக்கும். எனவே வாக்காளர் பட்டியலை திருத்துவது அவசியம். அரசியலமைப்பு பிரிவு 326 வாக்காளருக்கான தகுதிகளை குறிப்பிடுகிறது. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் அந்த தொகுதியில் வசிக்கும் இந்திய குடிமக்கள் மட்டுமே வாக்காளர்களாக பதிவு செய்ய தகுதி உடையவர்கள்.

தற்போது தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் 4.96 கோடி வாக்காளர்களின் விவரங்களை கொண்ட 2003ம் ஆண்டுக்கான பீகார் வாக்காளர் பட்டியல் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ளவர்கள் தங்கள் கணக்கெடுப்பு படிவங்களை சமர்பிக்கும் போது, இதை ஆவணச் சான்றாக பயன்படுத்தலாம். இந்த பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறையை எளிதாக்கும். ஏனெனில், மொத்த வாக்காளர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் இப்பட்டியலை தவிர வேறெந்த ஆவணத்தையும் சமர்பிக்க வேண்டியதில்லை. வாக்காளர்கள் மற்றும் வாக்குச் சாவடி நிலை அதிகாரிகள் இருவரும் இந்த விவரங்களை எளிதாக அணுக முடியும்.

2003 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் தாய் அல்லது தந்தைக்கு வேறு எந்த ஆவணங்களையும் வழங்குவதற்குப் பதிலாக, 2003 வாக்காளர் பட்டியலின் சான்றைப் பயன்படுத்தலாம். அத்தகைய வாக்காளர்கள் நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவத்துடன் தங்களுக்கான ஆவணங்களை மட்டுமே சமர்பித்தால் போதும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 மற்றும் வாக்காளர் பதிவு விதிகள் 1960 விதி 25ன் படி, ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வாக்காளர் பட்டியலைத் திருத்துவது கட்டாயம். தேர்தல் ஆணையம் 75 ஆண்டுகளாக வருடாந்திர திருத்தங்கள், தீவிரமான மற்றும் சுருக்கமான திருத்தங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.