Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புதிதாக மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை: விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்தது மின்வாரியம்

சென்னை: கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை என விதிமுறைகளில் புதிய தளர்வுகளை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக மின் இணைப்பு கோருவோர் புதிய தேவையான ஆவணங்களை அளித்து மின் இணைப்பு பெற முடியும். அதன்படி வீட்டுக்கு மின் இணைப்பு வாங்க விண்ணப்பப் படிவம் 1ஐ வாங்கி பூர்த்தி செய்து மின்வாரியத்தில் அளிக்க வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்துக்கு எவ்வித கட்டணமும் கிடையாது.

விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சில அடிப்படை தகவல்களுக்கு உரிய முறையில் பதிலளிக்க வேண்டும். அதேபோல், புதிய வீடு கட்டுவோர் அல்லது தொழிற்சாலைகள் கட்டுவோர் மின் இணைப்பு பெற பணி நிறைவு சான்றிதழ் அவசியம். தமிழ்நாட்டில் பொது கட்டிட விதிகள் தொடர்பாக 2019ல் புதிய சட்டம் அமலுக்கு வந்தது. இதன்படி, 10 ஆயிரம் சதுர அடி வரையிலான குடியிருப்பு கட்டிடங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு அனுமதி பெறுவோர், விதிமுறைகளுக்கு உட்பட்டு, கட்டிடங்களை கட்டியுள்ளனரா என்பதை உறுதி செய்ய, சி.சி. எனப்படும் பணி நிறைவு சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று அரசு அறிவித்தது. அதன்படி, 3 வீடுகளுக்கு மேற்பட்ட குடியிருப்புகளை கட்டுவோர், கட்டுமான பணி நிறைவு சான்று பெற வேண்டும் என்றும், இந்த சான்று பெற்ற பிறகே, குடிநீர், வடிகால், மின்சார இணைப்புகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பணி நிறைவு சான்று கோரி விண்ணப்பித்தால் மாத கணக்கில் ஆகியும் கிடப்பில் போடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் கட்டுமான பணிகள் முடிந்தும் மின் இணைப்பு பெற முடியால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை என விதிமுறைகளில் புதிய தளர்வுகளை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் புதிய ஆணைப்படி கீழ்காணும் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை. 14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள், 750 சதுர மீட்டர் பரப்பளவிற்குட்பட்ட வீடு, 14 மீட்டர் உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவிற்குட்பட்ட வணிக கட்டிடங்கள், அனைத்து தொழிற்சாலை கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு இனி கட்டிட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.