Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேர்தலில் வெற்றி பெற்றால் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம்: தேசிய மாநாட்டு கட்சி அறிவிப்பு

ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்றால் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தேசிய மாநாட்டு கட்சி முடிவு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் 5 கட்டங்களாக பேரவை தேர்தல் நடைபெற்றது. ஒன்றிய பாஜ அரசு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக செயல்பட்டு வருகிறது.

370வது பிரிவு நீக்கத்தால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களை குறைந்து விட்டதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளதால் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா ஸ்ரீ நகரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தலில் போட்டியிடும் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர்கள் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த உமர் அப்துல்லா, “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இரண்டு நாள்கள்தான் ஆகியுள்ளன. முதற்கட்ட தேர்தல் தேதி அறிவிக்கை நாளை வெளியான பிறகு தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வௌியிடுவோம்” என்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, “ஜம்மு தேர்தலில் வெற்றி பெறுவோம் என தேசிய மாநாட்டு கட்சி அதீத நம்பிக்கை வைத்துள்ளதாக பாஜ குற்றம்சாட்டுகிறது. அதீத நம்பிக்கைக்கு புதிய உதாரணமே பாஜதான்.

மக்களவை தேர்தலில் 400க்கு 400 இடங்கள் என கோஷமிட்டது யார்? பாஜதான். பின்னர் 370 என சொன்னார்கள். கடைசியில் 240ல் நின்றார்கள். அதீத நம்பிக்கை பற்றி பேசாமல் இருப்பது பாஜவுக்கு நல்லது. மக்கள் ஆதரவு அளித்து தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் 370 சட்டப்பிரிவு நீக்கத்துக்கு எதிராக ஜம்மு பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம்” என்று உறுதிபட கூறினார்.