Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேர்தல் முடிவு மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி திமுக கூட்டணி வெற்றி பெறும் பாஜ வீழ்ச்சியை சந்திக்கும்: துரை வைகோ பேட்டி

சென்னை: தேர்தல் முடிவுகள் மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் என்றும் துரை வைகோ கூறினார். மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான துரை வைகோ நேற்று மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்த நாடாளுமன்ற தேர்தல் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல். மக்கள் நல அரசியலுக்கும், ஜனநாய அரசியலுக்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம். மதவாத, பாசிச அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் அமையும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளோம். இந்த தேர்தலைப் பொறுத்தவரை புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு சென்ற போது, மக்கள் முகங்களில் தெரிந்த மலர்ச்சியே எங்கள் ஆதரவு உங்களுக்குத் தான் என்று சொல்லும் வகையில் இருந்தது.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெறும். பாஜக வீழ்ச்சியை சந்திக்கும். திமுக அரசின் திட்டங்களால் தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஜூன் 4ம் தேதி வெளியாகும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கலைஞரின் 101வது பிறந்த நாள் பரிசாக அமையும். இவ்வாறு அவர் கூறினார். “இந்தியா கூட்டணியின் சார்பில் நீங்கள் வெற்றிபெற்றால் ஒன்றிய அமைச்சரவையில் மதிமுக இடம் கேட்குமா?” என்று நிருபர்கள் கேட்டதற்கு, “ஒன்றிய அமைச்சர் பதவியைப் பற்றி எல்லாம் நான் நினைக்கவே இல்லை” என்று துரை வைகோ கூறினார்.