இறந்த வாக்காளர், ஊரில் இல்லாதவர்கள் பெயர்களை டிச.11க்குள் நீக்க வேண்டும்: பிஎல்ஓக்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்தில் முதல்வராக மம்தா பானர்ஜி பதவி வகிக்கிறார். அடுத்த ஆண்டு பேரவை தேர்தல் நடப்பதையொட்டி மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிலையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால் வாக்குசாவடி நிலை அதிகாரிகளுக்கு(பிஎல்ஓ) அனுப்பியுள்ள அறிக்கையில், பிஎல்ஓக்கள் தரவுகளை பதிவேற்றும் போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தகுதியான வாக்காளரின் பெயரையும் தக்க வைத்து தகுதியற்ற வாக்காளரின் பெயர்களை நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. எனவே, இறந்த மற்றும் உள்ளூரில் வசிக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பிஎல்ஓக்கள் டிச. 11ம் தேதிக்கு முன் படிவங்களை மீண்டும் சரி பார்த்து, இறந்த, இல்லாத வாக்காளர்களின் பெயரை நீக்க வேண்டும். யாராவது வேண்டுமென்றே தவறை செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

