புதுடெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் மோடிக்கு கிடைத்த தார்மீக தோல்வி என்று சோனியாகாந்தி கூறினார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் சோனியா காந்தி ஆற்றிய உரை: பிரதமர் மோடி தனது கட்சி மற்றும் கூட்டணிகளை விடுத்து, தனிப்பட்ட தனது பெயரில் மக்களிடம் வாக்கு கேட்டார். எனவே இந்த தேர்தல் முடிவு மோடிக்கு அரசியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் கிடைத்துள்ள தோல்வி. உண்மையில் அவர் மக்கள் நம்பிக்கையை இழந்து, அதன் மூலம் தலைமை ஏற்கும் உரிமையையும் இழந்து விட்டார். ஆனாலும், தோல்விக்கான பொறுப்பை ஏற்காமல், மீண்டும் பிரதமராக பதவியேற்க விரும்புகிறார். இனியும் அவர் தனது ஆட்சியின் பாணியையோ, நிலைப்பாட்டையோ மாற்றிக் கொள்வார் என்றோ, மக்கள் விருப்பத்தின்படி ஆட்சி செய்வார் என்றோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
அதே சமயம் கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தை புல்டோசர் கொண்டு இடித்ததை இனியும் தொடர முடியாது. நாடாளுமன்றத்தை சீர்குலைக்கவோ, எம்பிக்களை கேவலமாக நடத்தவோ, விவாதம் இல்லாமல் சட்டத்தை நிறைவேற்றவோ, நாடாளுமன்ற குழுக்களை புறக்கணிக்கவோ அனுமதிக்கப்படாது. இனி அவர்களால் நாடாளுமன்றத்தை முடக்க முடியாது. புதிய தேஜ கூட்டணி அரசை அதன் தவறுகளுக்கு பொறுப்பேற்க வைக்க வேண்டும். எனவே வரும் காலங்கள் நமக்கு சவாலனதாக இருக்கும். நாடாளுமன்றத்தில் எங்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகளின் பலத்தால் காங்கிரசும் வலுவடைந்து வருகிறது. இந்த சமயத்தில் ராகுல் காந்திக்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்க விரும்புகிறேன்.
எப்போதும் இல்லாத வகையில் தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் பல தாக்குதல்களை எதிர்கொண்டு போராடிய உறுதிப்பாட்டிற்காக ராகுல் சிறப்பு நன்றிக்கு தகுதியானவர். அரசியலமைப்பின் உத்தரவாதங்கள் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்த எங்களின் பிரசாரத்தை அவர் மிகவும் கூர்மையாக வடிவமைத்தார். அவரது இந்திய ஒற்றுமை நடைபயணமும், இந்திய ஒற்றுமை நீதி பயணமும் வரலாற்று சிறப்புமிக்கவை. இனி, எதிர்பார்த்ததை விட குறைவான செயல்திறன் உள்ள மாநிலங்களில் நமது கட்சியை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு சோனியா கூறினார்.