Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேர்தல் முடிவடைந்ததால் திருப்பூர் திரும்பிய வடமாநில தொழிலாளர்கள்

*தொழில்துறையினர் நிம்மதி

திருப்பூர் : பின்னலாடை தொழில் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் சிறு குறு நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் என ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழக தொழிலாளர்கள் மட்டுமல்லாது வட மாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பின்னலாடை நிறுவனங்கள் மட்டுமல்லாது உணவகங்கள், பேக்கரி, மருத்துவமனைகள், எண்ணெய் ஆலைகள், அரிசி ஆலைகள், கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஆரம்ப காலத்தில் தனி நபராக வந்த வட மாநில தொழிலாளர்கள் தற்போது குடும்பம் குடும்பமாக திருப்பூரை நோக்கி வர தொடங்கியுள்ளனர்.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் ரேஷன் பொருட்களும் அவர்களுக்கு வழங்கப்படுவதால் குடும்பமாக குடியேற துவங்கி உள்ளனர். கொரோனா தொற்றின்போது ஊரடங்கு அமலில் இருந்ததால் சொந்த ஊர் சென்ற வட மாநில தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்காக மீண்டும் திருப்பூர் வர துவங்கினர். வடமாநிலங்களை ஒப்பிடுகையில் திருப்பூரில் தொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகம்.

மேலும் திருப்பூரில் எப்போதும் வேலை இருக்கும் என்ற நம்பிக்கையில் திருப்பூர் பக்கம் திரும்புவதில் ஆர்வம் காட்டி வந்தனர். சில மாதங்களுக்கு முன்பாக நூல் விலை உயர்வு காரணமாக புதிய ஆர்டர்களை தொழில் துறையினர் எடுக்காததால் தொழில் மந்த நிலையில் சென்றது. இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் வேலையில்லாமல் அவதி அடைந்தனர். அதே நேரத்தில் நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்டமாக முடிவடைந்தாலும் கூட பல்வேறு மாநிலங்களில் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதன் காரணமாக திருப்பூரில் பணிபுரிந்து வந்த வடமாநில தொழிலாளர்கள் வாக்களிப்பதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். தற்போது நூல் விலை சராசரி நிலையில் உள்ளது. திருப்பூர் பன்னலாடை நிறுவனங்களுக்கு புதிய ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மீண்டும் பழைய நிலைக்கு திருப்பூர் தொழில்துறை வந்துள்ள நிலையில் வடமாநில தொழிலாளர்களின் தேவை அதிகரித்துள்ளது.

வாக்களிப்பதற்காக சென்ற வட மாநில தொழிலாளர்கள் வாக்களித்த பின்பும் தேர்தல் முடிவுக்காக காத்திருந்ததால் திருப்பூர் திரும்பி வருவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி நாடு முழுவதும் ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து வட மாநில தொழிலாளர்கள் திருப்பூர் வர துவங்கியுள்ளனர். நேற்றைய தினம் அசாம், பீகார், பாட்னா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த ரயில்கள் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரே நாளில் திருப்பூர் வந்தடைந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையம் முழுவதுமாக வடமாநிலத்தவர்களாக காணப்பட்டனர். இனி ஒரு வார காலத்திற்கு ரயில் மூலமாக வரும் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது.

சொந்த ஊரைவிட சம்பளம் அதிகம்

திருப்பூர் வந்துள்ள பாட்னாவைச் சேர்ந்த தொழிலாளர் கூறுகையில், ‘‘எங்கள் பகுதிகளில் தொழில் குறைவு, இதன் காரணமாக தொழிலுக்காக வெளியூர் செல்வது வழக்கம். திருப்பூரில் கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எங்கள் ஊரில் கிடைக்கும் சம்பளத்தை விட இங்கு அதிகமாக கிடைக்கிறது. வாக்களிப்பதற்காக சொந்த ஊர் சென்று ஒரு மாதமான நிலையில் மீண்டும் திருப்பூர் திரும்பி வந்துள்ளேன். ஏற்கனவே பணிபுரிந்த நிறுவனத்தில் பணிபுரிய செல்கிறேன்’’ என தெரிவித்தார்.

ரயில் நிலையத்தில் ஏஜென்ட்கள்

திருப்பூர் வரும் வட மாநில தொழிலாளர்களை பின்னலாடை உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்ல ஏஜென்டுகள் உள்ளனர். புதிதாக வரும் வட மாநில தொழிலாளர்களுக்கு விசிட்டிங் கார்டு வழங்கி அழைத்துச்சென்று குறிப்பிட்ட நிறுவனங்களில் வேலைக்கு சேர்த்து விடுகின்றனர். இதற்காக நிறுவனங்களில் கமிஷன் பெற்றுக் கொள்கின்றனர்.

சோதனை அவசியம்

வெளி மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு ரயில் மூலமாக 70% வட மாநில தொழிலாளர்கள் வந்திறங்குகின்றனர். ரயில் நிலையத்தில் எந்த ஒரு பரிசோதனையும் செய்யப்படுவதில்லை. திருப்பூர் மாநகரில் அதிகளவு கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையில் வட மாநில நபர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. ரயில் நிலையத்திலேயே அவர்கள் சோதனை செய்யப்படும் பட்சத்தில் கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் தடுக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

திரும்பி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது

வட மாநில தொழிலாளர்கள் வருகை குறித்து பின்னலாடை உற்பத்தி நிறுவன உரிமையாளர் சுப்பிரமணி கூறியதாவது: தேர்தலுக்குச் சென்ற வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தொழிலாளர் பற்றாக்குறை நீடித்த நிலையில் அவை குறையும் வாய்ப்பு உள்ளது. ஆனால் வட மாநில தொழிலாளர்கள் நிரந்தரமான தீர்வு கிடையாது. தேர்தல், திருவிழா உள்ளிட்டவற்றுக்கு சொந்த ஊர் சென்றால் நீண்ட விடுமுறை எடுத்துக் கொள்கின்றனர். அப்போது ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்து பணியில் அமர்த்துவதே நிரந்தர தீர்வாக அமையும் என தெரிவித்தார்.