காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு விழா: முதல்வர் திறந்துவைக்கிறார்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (27.06.2025) சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் அப்பள்ளி மற்றும் சூளைமேடு அஞ்சுகம் தொடக்கப் பள்ளிக்கு ரூ.13.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்து, மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்கள் மற்றும் மிதிவண்டிகளை வழங்குகின்றார்.
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல் சமூக நோக்கோடு செயல்படும் அறநிலையங்களாகவும் திகழ்ந்து வருகின்றன. ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயரவும், அவர்தம் குழந்தைகளின் உயர்கல்வி எண்ணங்கள் ஈடேறவும் திருக்கோயில்களின் சார்பில் 25 பள்ளிகள், 10 கல்லூரிகள் நடத்தப்பட்டு, அதில் 22,455 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த நான்காண்டுகளில் இப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ.138.13 கோடி செலவில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள், நூலகங்கள், கலையரங்கம், விளையாட்டு மைதானம் மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சுவர் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, கீழ்ப்பாக்கம், காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.11.15 கோடி செலவில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களில் 32 வகுப்பறைகள், ஆசிரியர்கள் ஓய்வறைகள், 5 ஆய்வங்கங்களுடன் கூடுதல் வகுப்பறை கட்டடமும், சூளைமேடு அஞ்சுகம் தொடக்கப்பள்ளியில் ரூ.2.79 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உணவருந்தும் கூடம், கலையரங்கம், கழிப்பிட வசதி, விளையாட்டு மைதானம் மேம்படுத்துதல் மற்றும் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடமும் மாணவச் செல்வங்களின் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் நாளை திறந்து வைக்கப்பட உள்ளன.
மேலும், 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் பழனி திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகளின் விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியருக்கு கட்டணமில்லாமல் மூன்று வேளை உணவு வழங்குதல் மற்றும் திருநெல்வேலி, ஸ்ரீ காந்திமதியம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தங்கும் விடுதியில் மாணவியருக்கு கட்டணமில்லாமல் உறைவிடம் மற்றும் உணவு வழங்கும் திட்டத்தை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தும், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்கள், மற்றும் மிதிவண்டிகளையும் வழங்கியும், ஒருகால பூசை திட்ட திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி பயில உதவித்தொகையாக ரூ.10,000/- மும் வழங்கி விழாப் பேருரை ஆற்ற உள்ளார்கள்.
இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தவத்திரு ஆதீன பெருமக்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், இ.ஆ.ப., ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.