Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தமிழ்நாட்டில் 3,650 மருத்துவ இடங்கள் பறி போய் விடும்: சபாநாயகர் அப்பாவு கவலை

நெல்லை: ‘புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் சிறந்த மருத்துவ கட்டமைப்பை கொண்டுள்ள தமிழ்நாட்டில் 3.650 மருத்துவ இடங்கள் பிற மாநிலங்களுக்கு போய் விடும்’ என்று நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சபாநாயகர் அப்பாவு கவலை தெரிவித்தார். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த 2018ம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்து எம்பிபிஎஸ் முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா, மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நேற்று நடந்தது.

கலெக்டர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். விழாவில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு 154 மாணவ- மாணவிகளுக்கு எம்பிபிஎஸ் பட்டங்களை வழங்கி பேசியதாவது: இந்தியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவ கட்டமைப்பை கொண்ட மாநிலம், தமிழ்நாடு தான். 38 அரசு, 36 தனியார் என மொத்தம் 74 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் 11,650 பேர் மருத்துவம் படிக்கின்றனர். தமிழ்நாட்டை விட 3 மடங்கு பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 68 மருத்துவக்கல்லூரிகள் மட்டுமே உள்ளன.

9,903 பேர் மட்டுமே மருத்துவம் படிக்கின்றனர். ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளது. இதன்படி 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு மருத்துவர் பணியிடம் என கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 8 ஆயிரம் பேர் மட்டுமே படிக்க முடியும். இதன் மூலம் 3,650 மருத்துவ இடங்கள் பறிபோய் விடும்.

இதற்கு உடனடியாக குரல் கொடுத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறுத்தி வைத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் 154 மருத்துவ மாணவர்கள் பட்டம் பெற்றனர். 14 மாணவர்கள் மருத்துவ பல்கலைக்கழக மெடல்களையும், 7 மாணவ, மாணவிகள் துறை மெடல்களும் என 21 பேர் பதக்கங்கள் பெற்றனர். மாணவி ஆர்த்தி மொத்தம் 12 பதக்கங்களை பெற்றார்.

* சட்டசபையில் எதிர்க்கட்சிகளுக்கே அதிக வாய்ப்பு

பட்டமளிப்பு விழா முடிந்து வெளியே வந்த சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில், ‘தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியினருக்கு 10 நிமிடங்கள் வாய்ப்பு அளித்தால் 5 நிமிடத்திற்குள் முடித்து விடுகின்றனர். ஆனால் எதிர்க்கட்சியினர் 10 நிமிடம் வாய்ப்பு கொடுத்தால், 20 நிமிடங்கள், 30 நிமிடங்கள் கூட பேச கூடுதல் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதன் மூலம் சட்டமன்றத்தில் 60 சதவீதம் எதிர்க்கட்சிகளுக்குத் தான் பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எந்த பிரச்னை குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் பேச உரிமை உண்டு.

அவர் 4 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்துள்ளார். அவருக்கு எல்லாமே தெரியும். 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகள் கேள்வி நேரத்திற்கு முன்பு அவையை ஒத்தி வைத்துள்ளார்களா? இதுகுறித்து முதல்வர் விரிவான விளக்கத்தை அளித்து விட்டார். எனவே ஆளுங்கட்சிக்கு ஒருவர், எதிர்க்கட்சிக்கு ஒருவர் என்ற முறையில் தான் பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதில் எந்தவிதமாக பாகுபாடும் இல்லை. குறிப்பாக எதிர்க்கட்சியினருக்கு தான் அதிகமான வாய்ப்பு அளிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.