Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கல்வி நிதி இல்லை, மெட்ரோ ரயில் திட்டம் ரத்து தமிழ்நாடு வளர கூடாது என ஒன்றிய அரசு கங்கணம்: மாநில கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் குற்றச்சாட்டு

நெல்லை: கல்வி நிதி இல்லை, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ரத்து என தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து விடக்கூடாதென ஒன்றிய அரசு கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் குற்றம் சாட்டினார். தமிழ்நாடு மாநில அளவிலான 72வது கூட்டுறவு வார விழா நிறைவு விழா பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் நேற்று காலை நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை வகித்தார்.

12 ஆயிரத்து 170 பேருக்கு ரூ.107.71 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள், கடனுதவிகள், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், கூட்டுறவு விழிப்புணர்வு வாகன விளம்பரங்கள் ஆகியவற்றை வழங்கி கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்றவுடன் விவசாயிகளுக்கான ரூ.12 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்து சான்று வழங்கினார்.

இதுதவிர நகை கடன் ரூ.5,225 கோடி தள்ளுபடி, சுய உதவிக்குழுக்கள் கடன் ரூ.2 ஆயிரத்து 500 கோடி தள்ளுபடி என மொத்தம் ரூ.20 ஆயிரம் கோடி கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்து முதல்வர் உத்தரவிட்டார். ஆனால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தேவையான நிதிகளை தர மறுக்கிறது. ரூ.2 ஆயிரம் கோடி கல்வி நிதியை தரவில்லை. எல்லா வகையிலும் தமிழர்களின் வளர்ச்சி, தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒன்றிய அரசால் தாங்கி கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டிற்கு என்னவெல்லாம் இடையூறு செய்ய முடியும் என எப்போதும் ஒன்றிய அரசு சிந்தித்து வருகிறது.

எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாட்டில் செயல்படுத்தக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு ஒன்றிய அரசு செயல்படுகிறது. கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு செயல்படுகிறது. ஆனால் இவற்றையெல்லாம் மாற்றிக் காட்டுவோம் என்று தமிழ்நாட்டின் நிதி ஆதாரத்தை கொண்டு அனைத்து மாநிலங்களும் பாராட்டும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

தேசிய அளவில் கூட்டுறவுத்துறை தரவுகளின் அடிப்படையில் 5 கேடயங்கள் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு. அது மட்டுமல்லாது 5 மாநிலங்களின் கூட்டுறவுத்துறை அமைச்சர்கள், பதிவாளர்களை அழைத்து கூட்டுறவு துறையை தன்னிடம் வைத்திருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டம் நடத்தினார். அப்போது அவரே தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்படுகிறது. பிற மாநிலங்கள் தமிழ்நாட்டை பின்பற்ற வேண்டும் என்றார்.

அந்த அளவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில் கூட்டுறவுத்துறை திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கூட்டுறவு துறையில் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் கோடி கடந்த ஆண்டு கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி கடன் வழங்க முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ளார். அதையும் சாதித்து காட்டுவோம். இவ்வாறு அமைச்சர் பெரிய கருப்பன் பேசினார்.