Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஒரு சமூகம் முன்னேற வேண்டும் என்றால் கல்விதான் அடிப்படை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஒரு சமூகம் முன்னேற வேண்டும் என்றால், அதற்கு கல்விதான் அடிப்படை என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:

எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். எல்லோரும் சமமாக வாழுகின்ற சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்பது தான் நம்முடைய லட்சியம். ஆட்சிப் பொறுப்பு என்பது, நம்முடைய லட்சியங்களை திட்டங்கள் மூலமாக வென்றெடுப்பதற்கான வழி. அதனால்தான், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும் போதெல்லாம், சமூகநலத் திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி, விளிம்பு நிலையில் இருக்கின்ற மக்களையும் முன்னேற்றிக்கொண்டு வருகிறோம். வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதுடன், அவர்கள் மேலெழுந்து வருவதற்கு துணை நிற்கிறோம்.

நம்முடைய திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளைப் பற்றி முக்கியமானவற்றை மட்டும் நான் சொல்ல வேண்டும் என்றால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு செயல்திட்ட சட்டம், 2024ஐ நிறைவேற்றி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான சட்டப்பூர்வ உறுதியை உருவாக்கியிருக்கிறோம். இந்தத் திட்டத்தால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான வளர்ச்சி திட்டங்களுக்காக, நிதிகள் விகிதாச்சாரப்படி கட்டாயம் ஒதுக்கப்பட்டு, சரியாக பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படுகிறது.

2021 முதல் 2025 வரைக்கும் ஆதிதிராவிடர் துணை திட்டத்திற்கு 87 ஆயிரத்து 664 கோடி ரூபாயும், பழங்குடியினர் துணை திட்டத்திற்கு 8 ஆயிரத்து 78 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கியிருக்கிறோம். ஒரு சமூகம் முன்னேற வேண்டும் என்றால், அதற்கு கல்விதான் அடிப்படை. அதனால்தான், பல்வேறு திட்டங்கள் மூலமாக, கல்வியில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியிருக்கிறோம். தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறோம். இதனால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பது மட்டுமல்ல, ஐ.ஐ.டி - என்.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களில், கடந்த 2024-25 கல்வியாண்டில், 16 மாணவர்கள் மட்டுமே சேர்ந்த நிலை மாறி, இந்த 2025-26 கல்வியாண்டில், 135 மாணவர்கள் முன்னணி கல்வி நிறுவனங்களில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் எந்தளவுக்கு மாணவர்கள் மீது அக்கறை எடுத்து மேம்படுத்துகிறோம் என்பதற்கு, எம்.சி.ராஜா சமூகநீதி விடுதியே அதற்கு சாட்சி, 44 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் மாற்றி, மாணவர்களுக்கான நவீன வசதிகளுடன் அதை உருவாக்கியிருக்கிறோம்.

இதேபோல், சென்னை - கோவை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில், ‘ஜிம்’ உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய 6 ‘மாதிரி விடுதி’-களை 80 கோடி ரூபாய் செலவில் அமைத்துக் கொண்டிருக்கிறோம். விடுதிகளில் தங்கி படிக்கின்ற மாணவர்களுக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்க, 36 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 77 கற்றல் மற்றும் கற்பித்தல் அறைகளை கட்டியிருக்கிறோம்.விடுதிகளை முறையாக பராமரிக்கவும், மாணவர்களின் பாதுகாப்புக்காகவும், சிசிடிவி-பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு கருவிகளோடு இருக்கின்ற விடுதி மேலாண்மை தகவல் அமைப்பை 27 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் ஆயிரத்து 383 விடுதிகளில் நிறுவியிருக்கிறோம்.

அடுத்து, நம்முடைய அரசு சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய திட்டங்களில் முத்தாய்ப்பான திட்டமாக நான் நினைப்பது, ‘அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டம்’ உலகளவில் இருக்கின்ற டாப் யூனிவர்சிட்டியில் நம்முடைய பிள்ளைகள் படிக்க, அவர்களின் குடும்ப வருமான வரம்பை 12 லட்சம் ரூபாயாகவும், உதவித்தொகையை 36 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.இந்த திட்டத்தின் வெற்றியை நீங்கள் எல்லோரிடமும் கொண்டு செல்லவேண்டும். 2003ல் இருந்து, 2021 வரைக்கும், இந்த திட்டத்தில் பயனடைந்த மாணவர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஆறு பேர், ஆனால், நம்முடைய திராவிட மாடல் அரசின் முன்னெடுப்புகளால், கடந்த ஐந்து ஆண்டுகளில் 385 மாணவர்கள் - ஆக்ஸ்ஃபோர்ட் - எடின்பரோ உள்ளிட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாணவர்களுக்காக 162 கோடியே 54 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கியிருக்கிறோம். அதுமட்டுமல்ல, அடுத்ததாக, இன்னும் 42 மாணவர்கள் இந்தத் திட்டத்தின்கீழ் உயர்கல்வி படிக்கப் போகிறார்கள். கல்லூரி நிகழ்ச்சிகளிலும் - மாணவர்கள் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சிகளிலும் நான் தவறாமல் வைக்கின்ற வேண்டுகோள் என்னவென்றால், மாணவர்கள் பட்டப்படிப்புடன் நிறுத்திவிடக் கூடாது, ஆராய்ச்சி படிப்புகளையும் படிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். அப்படி, முழுநேர முனைவர் பட்ட ஆராய்ச்சியை ஊக்குவிக்க, ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்திற்கான, குடும்ப வருமான வரம்பை, 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி, மாணவர்களின் எண்ணிக்கையையும் 2 ஆயிரமாக உயர்த்தி, ஒரு லட்சம் ரூபாய் வழங்குகிறோம். இப்படி, கடந்த நான்கு ஆண்டுகளில், 9 ஆயிரத்து 659 மாணவர்களுக்கு 90 கோடியே 97 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறோம்.

அடுத்த முக்கியமான திட்டம், தொல்குடி புத்தாய்வு திட்டம், பழங்குடியினர் தொடர்பான பாடங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களை ஊக்குவிக்க, நாட்டிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்ட திட்டம் தான் இது. இந்தத் திட்டத்தில், தமிழ்நாட்டு பழங்குடியினர் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய் என்று ஆறு மாதங்களுக்கும், முனைவர் மற்றும் முனைவர் பட்ட மேலாய்வு அறிஞர்களுக்கு மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாய் என்று மூன்று ஆண்டுகளுக்கும் உதவித்தொகை வழங்குகிறோம். இந்தத் திட்டத்தில், 2024-25ம் ஆண்டில், 70 மாணவர்களுக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கியிருக்கிறோம். 2025-26ம் ஆண்டுக்கான 2 கோடியே 82 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறோம்.

அடுத்து, சட்டப்படிப்பை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்காக சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி உதவித்தொகை திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம். இந்தத் திட்டத்தில், பத்தாயிரம் ரூபாயை மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்குகிறோம்! கடந்த இரண்டு நிதியாண்டுகளில், ஆயிரத்து 593 மாணவர்களுக்கு ஒரு கோடியே 67 இலட்சம் ரூபாயை உதவித்தொகையாக வழங்கியிருக்கிறோம். இந்த நிதியாண்டில் மட்டும் இந்த பயிற்சிக்காக 93 இலட்சம் ரூபாயை ஒதுக்கியிருக்கிறோம். கூடுதலாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகளிடம் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயை சிறப்பு பயிற்சி உதவித்தொகையாக வழங்குகிறோம்.

அடுத்து, பழங்குடியின செவிலியர் மாணவர்களுக்கான உதவித்திட்டம் மூலமாக 184 பழங்குடியின பெண் மாணவிகளின் செவிலியர் பட்டயப்படிப்பிற்கு ஆண்டுக்கு 70 ஆயிரம் ரூபாய் என்று மூன்று ஆண்டுகளுக்கு வழங்குகிறோம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இளைஞர்களுக்கான திறன் பயிற்சி வழங்கவும், வேலைவாய்ப்பை உறுதி செய்யவும், “தொல்குடி தொடுவானம்” திட்டம்,8 ஆயிரத்து 440 பேருக்கு 164 கோடியே 51 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கியிருக்கின்ற முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை அதிலும் குறிப்பாக பெண்களுக்கு முன்னுரிமை அளித்து, விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றுகின்ற “நன்னிலம் மகளிர் நில உரிமை திட்டம்”,கடந்த 5 ஆண்டுகளில், 3 லட்சத்து 3 ஆயிரத்து 703 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது; வழங்கிய பட்டாக்கள் வரன்முறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

தொழில்முனைவோர்களை வளர்த்தெடுக்க தமிழ்நாடு பீட் எக்ஸ்போ நடத்துகிறோம்,ஆதி கலைக்கோல் கலை இலக்கிய சங்கமம்! “அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்”! இந்தத் திட்டத்தில், நான்கு ஆண்டுகளில், ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, இதுவரை 910 கோடி ரூபாய் செலவிடப்பட்டு, 8 ஆயிரத்து 535 பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தொல்குடி வேளாண் மேலாண்மைத் திட்டம், விரிவான தூய்மைப் பணியாளர்கள் நலத் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது, வேறு தொழிலுக்கு மாற விரும்புபவர்களுக்கு மானியம், வீடில்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு 2 ஆயிரம் வீடுகள் என்று பல நலத்திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கிறது.

சமூக நல்லிணக்கத் திட்டத்தில், சாதிப் பாகுபாடற்ற மயானங்களைக் கொண்டிருக்கக்கூடிய கிராமங்களுக்கு 10 இலட்சம் ரூபாய் பரிசும் - சாதிப் பாகுபாடற்ற ஊராட்சிகளுக்கு ‘சமூக நல்லிணக்க ஊராட்சி’ விருதும் - ஒரு கோடி ரூபாய் வளர்ச்சி நிதியும் வழங்கி இருக்கிறோம். புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் அவரது இலக்கை அடைய நம்முடைய திராவிட மாடல் அரசும், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் என்றும் துணையாக இருப்

போம். இவ்வாறு அவர் பேசினார்.