சென்னை: அதிமுக கள ஆய்வு குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொள்வது பற்றி அக்கட்சியின் கள ஆய்வு குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். கட்சியின் பல்வேறு நிலைகளில் உள்ள கட்டமைப்புகளின் பணிகளை மேம்படுத்துவது குறித்தான கருத்துகளைப் பெற்றிடவும், புதுப்பிக்கப்பட்ட கட்சி உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக கட்சி உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்ததா என்பதை மாவட்ட வாரிய சென்று களஆய்வு செய்து, அதன் விபரங்களை அறிக்கையாக டிச.7-ம் தேதிக்குள் அளிக்கவும் கள ஆய்வுக் குழுவுக்கு பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இக்குழுவில் முன்னாள் அமைச்சர்களான கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ.செம்மலை, அ.அருணாசலம், மகளிரணி செயலாளர் பா.வளர்மதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், இக்குழுவுடன் பழனிசாமி இன்று, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.