யார் உள்ளனர், யார் வெளியேறினர் என எடப்பாடி தனது கட்சிக்குள் எஸ்ஐஆர் பணி செய்கிறார்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்டம் ராயபுரம் மேற்கு பகுதி 48 ‘அ’ வட்டம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் நடந்தது. வட்ட செயலாளர் பாலன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர் எம்எல்ஏ 500 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். விழாவில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: திமுகவினர் வீடு வீடாக சென்று எஸ்ஐஆர் படிவத்தில் அடிப்படையில் எத்தனை பேர் இறந்துள்ளார்கள், எத்தனை பேர் இடம்மாறி சென்று உள்ளார்கள், எத்தனை பேர் இரண்டு இடங்களில் பெயர் உள்ளது, இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதிமுகவில் எடப்பாடி போன பொதுக்குழுவில் எத்தனை பேர் வந்தார்கள், இந்த பொதுக்குழுவில் எத்தனை பேர் வந்துள்ளார்கள், எத்தனை பேர் இறந்து உள்ளார்கள், எத்தனை பேர் வெளியே சென்றுள்ளார்கள், எத்தனை பேர் டபுள் மைண்டில் உள்ளார்கள் என எடப்பாடி எஸ்ஐஆர் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.
திமுகவை விமர்சிக்க எடப்பாடிக்கு எந்த தகுதியும் இல்லை. அமித்ஷா பேசுகிறார் அடுத்த டார்க்கெட் தமிழ்நாடு தான், திமுக தொடங்கிய இந்த ராயபுரத்தில் இருந்து சொல்கிறேன், 100 அமித்ஷா வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, பகுதி செயலாளர் வ.பெ.சுரேஷ், வழக்கறிஞர் மருது கணேஷ், ந.மனோகரன் உள்ளிட்ட திமுகவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


