Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பிரச்னை எடப்பாடி பழனிசாமிக்கு‘கள்ள மவுனம்’ கைவந்த கலை: துரைமுருகன் காட்டமான பதில்

சென்னை: நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரைத் தடுக்கும் முயற்சி பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். “கள்ள மவுனம்” எதிர்க்கட்சித் தலைவருக்குக் கைவந்த கலை என்பதைக் காவிரி பிரச்னையில் மட்டுமல்ல, பல்வேறு அரசியல் பிரச்னைகள், தேர்தல் கூட்டணியிலும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்திருக்கிறார்கள்.

அந்த வாசகத்திற்கு மறுஉருவம் எடப்பாடி பழனிசாமிதானே தவிர வேறு யாருமல்ல. காவிரி இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த நீர் உரிமையில் 14.75 டி.எம்.சி நீரை கள்ள மவுனம் சாதித்துத் தாரை வார்த்தது இதே பழனிசாமிதான். அமராவதி ஆற்றின் கிளை நதியான தேனாற்றின் (“வட்டவடா” என கேரளாவில் அழைக்கப் படுகிறது) உபநதி சிலந்தி ஆறு ஆகும். இதைப் பொருத்தவரை, சென்ற 04.04.2024 அன்று நடைபெற்ற 29-ஆவது காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்திலேயே “காவிரி வடிநிலத்தில் கேரள மற்றும் கர்நாடக அரசுகள் மேற்கொள்ளும் சிறுபாசனம் பற்றிய விவரங்களைச் சேகரிக்கவும்.

கண்காணிக்கவும் வேண்டும்” எனத் தமிழ்நாட்டின் உறுப்பினர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலர், நீர்வளத்துறை அவர்கள் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி இருக்கிறார். இதை இனி வரும் கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்துவார். ஆகவே, காவிரி தீர்ப்பினை மீறும் விதமாகக் கேரளாவோ, கர்நாடக அரசோ செயல்பட முயற்சித்தால் அதை உறுதியுடன் எதிர்த்து தமிழ்நாட்டின் காவிரி உரிமையைச் சட்டரீதியாக மட்டுமல்ல, அனைத்து விதத்திலும் தமிழ்நாடு அரசு நிலைநாட்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.