Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒரு வாரமாக சேலம் வீட்டிலேயே எடப்பாடி முடக்கம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டாதது ஏன்? பரபரப்பு தகவல்கள்

சேலம்: தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை இன்னும் கூட்டாமல் இருப்பதுடன் சேலம் வீட்டிலேயே எடப்பாடி பழனிசாமி முடங்கி இருப்பது ஏன் என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வியடைந்தது. இதனால் அதிமுகவில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. ஓபிஎஸ் உள்பட கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை அதிமுகவில் இணைத்து இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம், கூட்டணியை பலப்படுத்தி இருந்தால் அதிமுக இந்த அளவுக்கு தோல்வியடைந்திருக்காது, தாங்கள் கூறிய வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என நிர்வாகிகள் பலவாறாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில், கட்சியின் மாவட்ட செயலாளர்களை அழைத்து தோல்வி எவ்வாறு ஏற்பட்டது, அடுத்தக்கட்ட அரசியலை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், வாக்குகள் குறைந்த இடத்தில் எவ்வாறு வாக்கு குறைந்தது, அடுத்த தேர்தலில் வாக்குகளை எவ்வாறு அதிகரிக்க வேண்டும் என ஆலோசனை நடத்தப்படுவது வழக்கம். ஆனால், தற்போது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினால் எதிர்ப்பு ஏற்படும். இதனால் கட்சியில் சலசலப்பு ஏற்படுவதுடன் கோஷ்டி பூசல் உருவாகி விடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டாமல் எடப்பாடி பழனிசாமி இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை தொகுதிகளில் கட்சி டெபாசிட் இழந்துள்ளதால் அங்கு சென்றால் தகராறு ஏற்படலாம் என்று கருதியே அவர் சேலத்திலேயே கடந்த ஒரு வாரமாக முடங்கியுள்ளதாக கட்சியினர் கூறி வருகின்றனர். மேற்கு மண்டலமான கோவை, சேலம் இந்த பகுதியில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை. இதன் காரணமாகவும் அவர் சேலத்திலேயே முடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ‘‘தேர்தல் தோல்விக்கு பிறகு பல்வேறு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. முக்கிய நிர்வாகிகள் இன்னும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் வந்து பார்க்கவில்லை. கோபமாக இருக்கும் கட்சியினரை சமாதானப்படுத்தும் வகையில் ஒரு சதவீத ஓட்டு அதிகமாக வாங்கி இருக்கிறோம் என எடப்பாடி கூறியுள்ளார். தற்போதுள்ள சூழ்நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டாமல் இருப்பதுதான் நிர்வாகிகளின் கோபத்தை தவிர்க்கும். எனவேதான் அவர் சேலத்திலேயே முடங்கியுள்ளார்,’’ என்றனர்.