Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லி எஜமானர்களை காப்பாற்ற அவதூறை அள்ளி வீசுகிறார் எடப்பாடி பழனிசாமி: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சாடல்!!

சென்னை: தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் அராஜகம் செய்யும் டெல்லி எஜமானர்களை காப்பாற்ற திமுக அரசின் மீது அவதூறு பரப்புகிறார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; பொழுது விடிந்தால் திமுக அரசுக்கு எதிராக எந்த அவதூறைப் பரப்பலாம் எனப் பித்தாலாட்ட அரசியல் செய்யவதையே முழுநேரப் பணியாகச் செய்து கொண்டிருக்கிறார் பழனிசாமி. கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டிய 617 கோடி ரூபாயை தமிழ்நாட்டுக்கு ஒதுக்காமல் அராஜகம் செய்து கொண்டிருக்கும் தனது டெல்லி எஜமானர்களைக் காப்பாற்ற திமுக அரசின் மீது அவதூறை அள்ளி வீசியிருக்கிறார்.

தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் காப்பதில் திராவிட மாடல் அரசும் தமிழக முதல்வரும் எடுத்துவரும் நடவடிக்கைகளினால் பள்ளிக் கல்வியில் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு விளங்கி வருகிறது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் செயல்திறனை அண்மையில் வெளியான பொதுத் தேர்வு முடிவுகளின் தேர்ச்சி விகிதம் சொல்லும். தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தமிழக முதல்வர் பார்த்து பார்த்து செய்யும் திட்டங்களால் இன்றைக்கு அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 74 விழுக்காடாக உயர்ந்து வரலாற்றுச் சாதனைப் படைக்கப்பட்டிருக்கிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 96 விழுக்காட்டைத் தொட்டுச் சாதனைப் படைக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சாதனைகள் எல்லாம் தமிழ்நாட்டின் மீது வன்மத்துடனும் வயிற்றெரிச்சலுடனும் செயல்படும் தமிழர் விரோத ஒன்றிய அரசுக்கு எரிச்சலூட்டுவதில் ஆச்சரியமில்லை. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் மும்மொழிக்கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய 2152 கோடி ரூபாயை ஒதுக்குவோம் என மிரட்டியது ஒன்றிய அரசு, மிரட்டலுக்கு அஞ்சி அடிபணிய இது ஒன்றும் மானங்கெட்ட அடிமை அதிமுக ஆட்சி அல்ல, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் அரசு, அந்தத் தொகையையும் மாநில அரசே ஏற்கும் என அறிவித்து மாணவர்களின் கல்வி உரிமையைக் காத்து நின்றது.

தரங்கெட்ட மொழியில் பச்சைப் பொய்களை அறிக்கையாக வெளியிட்டால் அவை உண்மையாகிவிடாது என்பதை அறியாமல் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் எனும் பொறுப்பிற்குக் கொஞ்சமும் தகுதியற்ற முறையில் பாஜகவின் வாட்சப் யூனிவர்சிட்டி தகவல்களை அறிக்கையாக வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறைக்கு வரலாற்றில் இல்லாத வகையில் நிதியை ஒதுக்கி சாதனைப் படைத்திருக்கிறது. தனது ஆட்சியையே தமிழ்நாட்டு உரிமைகளைப் பாஜகவிடம் அடகு வைக்கும் அடிமை விளையாட்டாக நடத்திய பழனிசாமியின் பித்தலாட்டங்கள் ஒரு நாளும் மக்களிடம் வெற்றியடையாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.