Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இயர் பட்ஸ், ஹெட் போன்களின் அபரிவிதமான பயன்பாட்டால் உலக அளவில் 40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

மனிதர்களின் உடல் என்பது மிகவும் விசித்திரமானது. ஏதாவது ஒரு பெரிய விபத்து ஏற்பட்டால் மட்டுமே உடனடியாக உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதை நாம் அறிய முடியும். ஆனால் நமது உடல் உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதை அல்லது பாதிப்புக்குள்ளாவதை நாம் உடனடியாக அறிய முடியாது. ஏனென்றால் நமது உறுப்புகளில் வடிவமைப்பு அப்படி. அந்த வகையில் நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஏதாவது ஒரு வகையில் எதிர்ப்பு சக்திகளை தாங்கும் வல்லமையை இயற்கை கொடுத்துள்ளது.

அதனை நாம் பொறுமையாக கையாண்டு அந்த வல்லமையை பயன்படுத்திக் கொண்டால் கடைசி வரை அந்த உறுப்புகள் நமக்கு நன்மை பயக்கும். அந்த உறுப்புகளின் செயல்பாட்டிற்கு எதிர்வினையாக நாம் செயல்பட்டால் அது கொஞ்சம் கொஞ்சமாக பலவீனம் அடைந்து இறுதியில் அந்த உறுப்பு நமக்கு எந்த வகையிலும் பயன்படாத வகையில் பேராபத்தில் சென்று ஒரு விபரீத பாடத்தை நமக்கு கற்றுக் கொடுத்துச் சென்று விடுகிறது. பல்வேறு உறுப்புகளை நாம் முறையாக பராமரிக்காமல் நமது உடம்பை நாமே கெடுத்துக் கொள்கிறோம்.

உதாரணத்திற்கு கல்லீரலை சொல்லலாம். மனிதனின் கல்லீரல் என்பது தன்னைத்தானே சுத்திகரித்துக் கொள்ளும் தன்மை உடையது. இதனால் மனிதர்கள் ஆல்கஹால் அதிக எண்ணெய் மற்றும் மசாலா கொண்ட உணவு பொருட்களை அதிகளவில் எடுத்துக் கொள்கின்றனர். ஓரளவிற்கு மேல் அது தன்னைத்தானே சுத்திகரித்துக் கொள்ளும் தன்மையை இழந்து இறுதியாக அது 50 சதவீதத்திற்கு மேல் பழுதடைந்த பின்பு தான் நமக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது. அதன் பின்பு பல்வேறு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு நாம் பயணிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு உறுப்பிற்கும் ஒரு மகத்துவம் உண்டு.

நாம் அதனை முறையாக பின்பற்றினால் அந்த உறுப்புகள் நமக்கு பல்வேறு நன்மைகளை தொடர்ந்து வழங்கிக்கொண்டே இருக்கும். அவ்வாறு இல்லாமல் அந்த உறுப்புகளுக்கு நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து அதனை முறையாக பராமரிக்காவிட்டால் அந்த உறுப்புகள் செயலிழந்து நாம் காலம் முழுவதும் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்குள்ளாகி கடும் அவதிக்குள்ளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில் செல்போன்களின் பயன்பாடு வந்த பின்பு கண்கள் மற்றும் காதுகளில் அதிக பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக அதிக நேரம் செல்போன்களை பயன்படுத்துவதால் பார்வை குறைபாடு ஏற்படுகிறது.

பெரியவர்களுக்கு மட்டுமல்லாது குழந்தைகள் முதல் கல்லூரி படிப்பை பயிலும் இளைய தலைமுறையினர் வரை இந்த பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஒரு காலகட்டத்தில் சினிமா தியேட்டர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும்போது அதிகப்படியான சத்தத்தில் நாம் படங்களை பார்ப்போம். அவ்வாறு பார்த்துவிட்டு வெளியே வரும்போது சில பேருக்கு தலை வலி ஏற்படும். இதனால் சிலர் சினிமா தியேட்டரில் சென்று அதிக சத்தத்துடன் படங்களை பார்ப்பதை தவிர்த்து வந்தனர்.

சத்தம் என்பது அந்த அளவிற்கு சிலருக்கு ஒத்து வராது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் மற்றவர்களுக்கு தொல்லை தராமல் அதிகப்படியான சத்தத்தை நாம் கேட்பதற்கு ஆரம்பக் காலகட்டத்தில் வாக்மேன் எனப்படும் கருவியை பயன்படுத்தி வந்தோம். அதன் பிறகு செல்போன்களின் அபரிவிதமான வளர்ச்சியினால் விதவிதமான ஹெட்போன்கள் சந்தைக்கு வந்து அலங்கரித்தன. அதை அதிகளவில் இளைஞர்கள் வாங்கி பயன்படுத்தி வந்தனர். ஹெட்போன்கள் அதிகம் பயன்படுத்தக் கூடாது, இதனால் காது சம்பந்தமான பிரச்னைகள் வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

அந்த எச்சரிக்கையை நாம் ஒருபோதும் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் ஹெட்போன்களுக்கு பிறகு வந்த இயர் பட்ஸ் எனப்படும் புதிய வகை கருவியையும் அதிகளவில் இளைய தலைமுறையினர் வாங்கி பயன்படுத்த தொடங்கினர். ஹெட் போன்களில் இல்லாத பல விஷயங்கள் இயர் பட்ஸ் எனப்படும் கருவியில் இருந்தன. இதனால் இளைஞர்கள் அதை அதிகளவில் வாங்கி பயன்படுத்தினர். ஹெட்போன்களை பயன்படுத்தும் போது வெளியே உள்ள சத்தங்களும் நமக்கு ஓரளவில் கேட்கும். ஆனால் இயர்பட்ஸ் எனப்படும் கருவியை பயன்படுத்தும் போது வெளியே உள்ள எந்தவித சத்தமும் நமக்கு கேட்காமல் நாம் கேட்கும் பாடல் மட்டுமே கேட்கும். இதன் மூலம் நம்மைச் சுற்றி என்ன சத்தம் இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளாமல் இருக்க முடியும். அந்த அளவிற்கு இந்த கருவி முழுவதும் மிகத் துல்லியமாக தயார் செய்யப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் காதுகளில் ஓரளவிற்கு மேல் அதிக ஒலியை நமக்கு தருவதால் படிப்படியாக செவித்திறன் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே இது குறித்து பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்ட பின்பும் நாம் ஏற்கனவே கூறியது போன்று ஒரு உறுப்பு பாதிக்கப்படும் வரை அதற்கு மக்கள் முக்கியத்துவம் தருவது கிடையாது. தற்போது செவித்திறன் பாதிப்பு என்பது உலகையே அச்சுறுத்தும் வகையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் உலக சுகாதார அமைப்பு ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டு ஆய்வு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி உலக அளவில் 40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வு ஆய்வறிக்கை கூறுகிறது. இவர்களில் 20 சதவீத பேரிடம் மட்டுமே காது கேட்கும் கருவிகள் உள்ளதாகவும், 2050ல் 250 கோடி பேருக்கு ஏதாவது ஒரு வகையான செவித்திறன் பாதிப்பு இருக்கும் என்ற அதிர்ச்சி தகவலையும் அந்த ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

ஹெட்போன்கள் மூலம் சத்தமான இசை கேட்பதால் 100 கோடி இளைஞர்கள் நிரந்தர செவித்திறன் இழப்பை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளதாக அந்த ஆய்வு அறிக்கை கூறுகின்றது. எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அதை முதலில் சாதாரணமாக எடுத்துக்கொண்டு பாதிப்பு அடைந்த பின்பு அது குறித்து புலம்பி தீர்க்கும் இளைய தலைமுறையினர் செவித்திறன் விஷயத்திலும் சற்று கவனமாக இல்லை என்றால் இன்று காதுகளுக்கு விருந்தளிக்கும் இசை வருங்காலத்தில் எந்த ஒரு சப்தத்தையும் கேட்க முடியாமல் செய்துவிடும் என்பதே நிதர்சனமான உண்மை.

எனவே உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை இன்றைய கால இளைய தலைமுறையினர் அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் அதனை வருங்காலத்திற்கு தேவைப்படும் மருத்துவ குறிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அனைவரின் விருப்பமாக உள்ளது.

செவித்திறன் பாதிப்பு குறித்து காது மூக்கு தொண்டை பிரிவு பேராசிரியர் ஒருவர் கூறுகையில், ‘‘தற்போது இருக்கும் காலகட்டத்தில் வெளிச்சம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் சப்தம் தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. காதுகளை பொருத்தவரை 60 டெசிபிலுக்கு கீழ் நாம் சப்தங்களை கேட்பது நல்லது. இயர் பட்ஸ் மற்றும் ஹெட் போன் எனப்படும் கருவியை அதிகம் பயன்படுத்துவதால் தேவையில்லாத ஒரு பெரிய பொருளை நாம் காதில் வைத்துக் கொள்கிறோம். நமது வாயிலோ அல்லது மூக்கிலோ தேவையில்லாத ஒரு பொருளை எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் காதில் அப்படி ஒரு பொருளை வைத்துக் கொள்கிறோம் என்றால் அதனால் காதினுள் வியர்வை வெளிப்படும். இந்த வியர்வை வெளியே வராது.

இதனால் அழுக்கு உள்ளே சேர்ந்து காதினுள் தொற்று பாதிப்பு ஏற்படும். அழுக்கு உள்ளே சேரச்சேர தொற்று பாதிப்பு அதிகரிக்கும். சிலருக்கு காதில் ஓட்டை இருந்தால் அந்த ஓட்டை உள்ளே இந்த வியர்வை சென்று நடு காதில் இருந்து சீழ் வழிய தொடங்கும். இந்த ஹெட் போன் மற்றும் இயர் பட்ஸ் எனும் கருவியை பயன்படுத்தும் போது வெளியில் இருந்து வரும் சத்தம் நமக்கு கேட்காது. இதனால் நாம் செல்போனில் எவ்வளவு சத்தம் கேட்கிறோம் என்பது நமக்குத் தெரியாது. நாம் டிவியில் அதிகமாக சப்தம் வைத்து கேட்டால் அருகில் உள்ளவர்கள் வந்து ஏன் இவ்வளவு சத்தமாக கேட்கிறாய் என கேட்பார்கள். ஆனால் காதில் தனியாக ஒரு கருவியை மாட்டி பயன்படுத்தும் போது நாம் எவ்வளவு சத்தம் கேட்கிறோம் என்பது நம்மை அறியாமல் அதிக சத்தத்தை கேட்க வைக்கும். தற்போது அதிகளவில் இந்த இயர் பட்ஸ் மற்றும் ஹெட்போன் கருவியை பயன்படுத்தும் நபர்கள் பலர் சரிவர காது கேட்பதில்லை, சிறிய சத்தம் கேட்டாலே ஒரு விதமான வெறுப்புணர்ச்சி எரிச்சல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இயர் பட்ஸ் மற்றும் ஹெட்போனை பொறுத்தவரை தேவையான அளவு குறைவான சத்தத்துடன் கேட்பது நல்லது. அதிக சத்துத்துடன் அதிக மணி நேரம் பயன்படுத்துவது கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

அதிக சத்தத்தை கேட்பதால் இரண்டு விதமான பிரச்னைகள் காதுகளுக்கு ஏற்படுகின்றன. ஒன்று பெரிய சத்தத்தை உடனடியாக நாம் கேட்பதால் ஏற்படும் பிரச்னை. அப்போது காதிலிருந்து ஒரு விதமான சத்தம் நமக்கு கேட்டு அதன் பிறகு காது பாதிப்படையும். இதன் மூலம் நிரந்தரமாகவோ அல்லது படிப்படியாகவோ காது கேட்கும் திறனை இழக்கிறோம். இரண்டாவது பிரச்னை அடிக்கடி ஹெட்போன்களை பயன்படுத்துவதன் மூலம் அதிக சத்தத்துடன் கேட்பதன் மூலம் உட்செவியில் பாதிப்பு ஏற்பட்டு படிப்படியாக செவித்திறன் பாதிப்பு ஏற்படும்.