Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மதுபோதையில் கார்களை மோதி கலாட்டா செய்த வாலிபர்கள்: சினிமா சூட்டிங் போல் சம்பவம் நடந்ததால் பரபரப்பு

திருப்போரூர்: கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலை வாலிபர்கள் இருவர் மதுபோதையில் படுத்திருந்தனர். அவர்களது கார் அப்பகுதியில் இருந்த சாலையோரம் நிறுத்தப் பட்டிருந்தது. அப்போது, அங்கு வேறொரு காரில் வந்த 5 பேர் காரை ஓரமாக நிறுத்தி விட்டு ஸ்பீக்கரில் பாட்டு போட்டு விட்டு நடனமாடினர். உடனே முன்பே அங்கு இருந்த இருவரும் சென்று அவர்களுடன் சென்று நடனமாடினர். இதனிடையே இவர்களுக்குள் பாட்டை மாற்றி போடுவதில் தகராறு ஏற்பட்டதில் ஒருவர் மீது பீர்பாட்டிலால் தாக்கி மண்டையை உடைத்து விட்டு ஐந்து பேரும் அவர்கள் வந்த காரில் தப்பிச் சென்றனர். திடீர் தாக்குதலால் நிலை குலைந்த இருவரும் தாங்கள் வந்த காரை எடுத்துக் கொண்டு தங்களை தாக்கி விட்டு சென்ற காரை துரத்திச் சென்றனர். இரண்டு கார்களும் கிழக்கு கடற்கரை சாலையில் அதிகாலை 6 மணியளவில் மாமல்லபுரம் நோக்கி சென்றன.

பின்னர், பூஞ்சேரி வழியாக திருப்போரூரை நோக்கி இரண்டு கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக விரட்டிச் சென்றன. இதனிடையே பீர் பாட்டிலால் தாக்கப்பட்ட நபர் காரில் இருந்தபடி செல்போன் மூலம் தங்களை மர்ம நபர்கள் தாக்கி விட்டு தப்பிச் செல்வதாகவும், திருப்போரூர் வந்தால் மடக்கிப் பிடிக்கலாம் என்று நண்பர்களுக்கு தகவல் கொடுத்தனர். திருப்போரூர் கந்தசுவாமி கோயில் குளம் அருகே மூன்று கார்களும் ஒன்றுடன் ஒன்று மோதி கலாட்டாவில் ஈடுபட்டனர். இதனிடையே, கோவளத்தில் மது பாட்டிலால் வாலிபரை தாக்கிய அந்த கும்பல் காரில் இருந்து இறங்கி அருகே கிடந்த கற்களை எடுத்து தங்களை துரத்தி வந்த கார் கண்ணாடிகள் மீது வீசி அவற்றை உடைத்தனர்.பின்னர், கார் சாவியை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அவர்களை துரத்திக் கொண்டு சென்ற மற்றொரு காரில் வந்த நண்பர்கள் 4 பேர் வேகமாக சென்றபோது காலவாக்கம் எஸ்.எஸ்.என். கல்லூரி அருகே சாலையோரம் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினர். இந்த சேசிங் மற்றும் கார் கண்ணாடி உடைப்பு, பைக் மீது மோதல் போன்றவற்றால் பீதி அடைந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து அவர்களை பிடிப்பதற்குள் மோதலுக்கு காரணமான ஒரு காரில் வந்த 4 நபர்கள் தப்பிச் சென்றனர். மற்ற இரண்டு கார்களையும் அவற்றில் வந்த 6 நபர்களையும் பிடித்துச் சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.