கொல்கத்தா: கொல்கத்தாவில் ஐஐஎம் மாணவி ஒருவர் சக மாணவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருந்த பெண் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.
இதேபோல் கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள மாநில அரசு சட்ட கல்லூரியில் முதலாமாண்டு சட்டம் படித்து வந்த 24 வயது மாணவி ஒருவர் கடந்த மாதம் 26ம் தேதி சக மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் கல்லூரி பாதுகாவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சி சம்பவங்களிலிருந்தே மாணவர்களும், பெற்றோர்களும் மீளாத நிலையில் மீண்டும் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள அவலம் அரங்கேறி உள்ளது.
கொல்கத்தா ஐஐஎம்-மில் படித்து வரும் மாணவி ஒருவர் சக மாணவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஹரிதேவ் பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “கல்லூரியில் நடந்த கவுன்சிலிங் பயிற்சிக்கு சென்றபோது சக மாணவர் ஒருவர் என்னை ஆண்கள் விடுதிக்கு அழைத்து சென்றார்.
அங்கு அறையில் போதைப்பொருள் கலந்த குளிர்பானத்தை எனக்கு மாணவர் தந்தவுடன் நான் மயங்கி விட்டேன், சுயநினைவு திரும்பி எழுந்தபோது நான் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்தேன். இதை யாரிடமாவது சொன்னால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மாணவர் என்னை மிரட்டினார்” என தெரிவித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
* பலாத்காரமா, அப்படியா? தந்தை அதிர்ச்சி கேள்வி
கொல்கத்தா ஐஐஎம் மாணவியின் தந்தை கூறுகையில், ‘எனது மகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அப்படி எதுவும் நடக்கவில்லை. வெள்ளிக்கிழமை இரவு 9:34 மணிக்கு எனது மகள் ஆட்டோவிலிருந்து விழுந்து சுயநினைவை இழந்ததாக எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர் எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையின் நரம்பியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் அவரை மீட்டு அங்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. எந்த பாலியல் வன்கொடுமையும் நடக்கவில்லை என்று எனது மகள் என்னிடம் கூறினார்’ என்றார்.
* பாதுகாப்பு குறைபாடு- காங்.
கொல்கத்தா ஐஐஎம் வளாகத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுவது மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதை காட்டுகின்றது என்றும், மத்திய கல்வி நிறுவனத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் சிபிஐ(எம்) குற்றம்சாட்டியுள்ளது. ஐஐஎம் வளாகத்தின் நுழைவு வாயிலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இயக்குனரை நேரில் சந்திக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* ஐஐஎம் விளக்கம்
கொல்கத்தா ஐஐஎம் பொறுப்பு இயக்குனர் சாய்பால் சட்டோபாத்யாய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அனைத்து தனிநபர்களின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை பாதுகாக்கும் அதே வேளையில் உரிய நடைமுறை பின்பற்றப்படுவதை உறுதி செய்வதில் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது. கொல்கத்தா ஐஐஎம் இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக பூஜ்ய சகிப்புத்தன்மையை கொண்டுள்ளது. ஐஐஎம் பாதுகாப்பான மற்றும் மரியாதைக்குரிய வளாக சூழலை நிலைநிறுத்துவதில் உறுதியாக உள்ளது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.