போதை பொருட்களை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை முழுவதும் பீக் ஹவரில் போலீசார் தீவிர வாகன சோதனை: சென்னை பெருநகர கமிஷனர் அருண் உத்தரவுப்படி நடவடிக்கை
சென்னை: சென்னை பெருநகர காவல் எல்லையில் போதைப்பொருட்கள் முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உதவி கமிஷனர் தலைமையில் ‘போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு’ புதிதாக தொடங்கியுள்ளார். இந்த தனிப்பிரிவானது சென்னை பெருநகர காவல் எல்லையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. உச்ச நேரங்களில் (பீக் ஹவர்) போலீசார் வாகன சோதனையில் போக்குவரத்து நெரில் இருக்கும் என்பதால், அந்த நேரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவது கிடையாது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு போதை பொருட்கள் கடத்தல் கும்பல் பீக்ஹவர்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல்களில் ஈடுபட்டு வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து பெருநகர காவல் எல்லையில் உள்ள 104 காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களும் அவரவர் காவல் எல்லையில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான தீவிர வாகன சோதனையில் ஈடுபட பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலான பீக் ஹவர்களில் சோதனையில் ஈடுபட உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த உத்தரவை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக சென்னை முழுவதும் போலீசார் போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பெருநகர காவல்துறையில் உள்ள 4 மண்டல இணை கமிஷனர்கள் மேற்பார்வையில் இந்த சோதனை நடந்து வருகிறது.
குறிப்பாக முக்கிய சாலைகளான அண்ணாசாலை, வடபழனி 100 அடி சாலை, ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜாஜி சாலை, காமராஜர் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை என பெருநகரம் முழுவதும் சட்டம் ஒழுங்கு போலீசார் பீக் ஹவரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லூரி, பல்கலைகள் அருகே சோதனை
போதைப்பொருட்கள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் டிஜிபி மகன் அருண், போதை பொருட்கள் விற்பனையில் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் ஈடுபட்டுள்ளதாக அளித்த வாக்குமூலத்தின் படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் போதை பொருட்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் சென்னையில் உள்ள கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.