போதையில் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வைத்து வியாபாரியை ஆபாச வீடியோ எடுத்து ரூ.10 லட்சம் கேட்ட அர்ச்சகர் கைது
நாகர்கோவில் : போதையில் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வைத்து வீடியோ எடுத்து வியாபாரியிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய அர்ச்சகரை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்ட இந்து தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர், சைபர் கிரைம் போலீசாரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது : நாகர்கோவிலில் சூப் கடை நடத்தி வருகிறேன். நானும், களியங்காடு பகுதியை சேர்ந்த ஈசான சிவம் என்ற ராஜாவும் (34) 5 வருடங்களாக நண்பர்களாக பழகி வந்ேதாம். ஈசான சிவம், கோயில்களில் கும்பாபிஷேகம், பூஜைகள் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார். திடீரென என்னிடம் கும்பாபிஷேகம் மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் கடை தொடங்க இருக்கிறேன். எனவே ரூ.10 லட்சம் தர வேண்டும் என கேட்டார்.
அப்போது நான், என்னிடம் அவ்வளவு பணம் கிடையாது என கூறினேன். இந்த பிரச்னைக்கு பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர் என்னிடம் பேசுவதில்லை. இந்த நிலையில் திடீரென ஈசான சிவத்தின் நண்பர் என கூறி, தாழக்குடியை சேர்ந்த கோலப்பன் (53) என்பவர் என்னை தொடர்பு கொண்டார். ஈசான சிவம், உங்களிடம் பேச வேண்டும் என்கிறார். எனவே கோட்டாரில் உள்ள ஒரு வீட்டுக்கு வருமாறு என்னை அழைத்தார். நான், அந்த வீட்டுக்கு சென்ற போது அங்கு, ஈசான சிவம் இல்லை. கோலப்பன் மட்டும் தான் இருந்தார். அவரிடம் ஈசான சிவம், எங்கே என கேட்ட போது, காரில் வந்து கொண்டு இருக்கிறார். இப்போது வந்து விடுவார் என கூறினார். நானும், அவரது வருகைக்காக காத்திருந்தேன். அப்போது கோலப்பன் எனக்கு மது ஊற்றி கொடுத்தார். நான் அளவுக்கு அதிகமாக குடித்ததால், போதை தலைக்கு ஏறியது. அதன் பிறகு அங்கு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை. இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து ஈசான சிவம், கோலப்பன் ஆகியோர் எனது சூப் கடைக்கு காரில் வந்தனர். ஈசான சிவம் காரில் இருந்தவாறே என்னிடம், நீ கோட்டாரில் உள்ள வீட்டுக்கு வந்த போது பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்தாய். போதையில் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் போது, கோலப்பன் மூலம் வீடியோ கால் செய்ய வைத்து அதை ஸ்கிரீன் ரிக்கார்டு செய்து வைத்து உள்ளேன்.
நான் கேட்ட ரூ.10 லட்சத்தை தராவிட்டால், இந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என கூறி மிரட்டினார். அதன் பின்னரே எனக்கு அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து, பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வைத்து அதை வீடியோ பதிவு செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது. நான் அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்காததால், அந்த வீடியோவை வாட்ஸ் அப் மூலம் அனைவருக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் நானும் எனது குடும்பத்தாரும் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறோம். எனவே இதற்கு காரணமான ஈசான சிவம் மற்றும் கோலப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறி இருந்தார்.இந்த புகாரின் பேரில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சொர்ணராணி விசாரணை நடத்தி, ஈசான சிவம் மற்றும் கோலப்பன் ஆகியோர் மீது ஆபாச வீடியோ பரப்புதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் ஈசான சிவம் நேற்று கைது செய்யப்பட்டார். அவரது நண்பரை தேடி வருகிறார்கள்.