Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மனித மூளைக்கு எட்டாத மருந்து கலவை புற்றுநோய் சிகிச்சையில் ‘கூகுள்’ புதிய புரட்சி: சுந்தர் பிச்சையின் அறிவிப்பால் அறிவியல் உலகம் ஆச்சரியம்

 

மவுண்டன் வியூ: புற்றுநோய் சிகிச்சையில் பெரும் சவாலாக உள்ள ‘குளிர் கட்டிகளுக்கு’ தீர்வு காணும் புதிய மருந்து கலவையை கூகுளின் செயற்கை நுண்ணறிவு மாதிரி கண்டறிந்துள்ளது. புற்றுநோய் சிகிச்சையில், நோய் எதிர்ப்பு அமைப்பால் எளிதில் கண்டறிய முடியாத ‘குளிர் கட்டிகள்’ (Cold tumors) எனப்படும் புற்றுநோய் செல்களை அழிப்பது மருத்துவ உலகிற்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தின் ‘டீப்மைண்ட்’ செயற்கை நுண்ணறிவு பிரிவும், யேல் பல்கலைக்கழகமும் இணைந்து ‘செல்2சென்டென்ஸ்-ஸ்கேல் 27பி’ (C2S-Scale 27B) என்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்கியுள்ளன. 27 பில்லியன் அளவுருக்களைக் கொண்ட இந்த அடித்தள மாதிரி, குளிர் கட்டிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான புதிய கருதுகோளை உருவாக்கி, அதனை ஆய்வகத்திலும் நிரூபித்துக் காட்டியுள்ளது. இந்த முக்கிய அறிவிப்பை கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை நேற்று வெளியிட்டார்.

கூகுளின் ஜெம்மா கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த செயற்கை நுண்ணறிவு, செல்களின் சிக்கலான உயிரியல் மொழியைப் படித்துப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டது. இதன் மூலம், நோய் எதிர்ப்பு அமைப்பின் பார்வையில் இருந்து தப்பிக்கும் ‘குளிர் கட்டிகளை’, நோய் எதிர்ப்பு அமைப்பு எளிதில் கண்டறிந்து தாக்கும் வகையில் ‘சூடான கட்டிகளாக’ மாற்றுவதற்கான புதிய வழிகளை ஆராய்ந்தது. அப்போது, ‘சில்மிடாசெர்டிப் (CX-4945)’ என்ற மருந்தையும், குறைந்த அளவு ‘இன்டர்ஃபெரான்’ மருந்தையும் குறிப்பிட்ட சூழலில் சேர்த்துப் பயன்படுத்தும்போது, அது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு புற்றுநோய் செல்களை அடையாளம் காட்டும் செயல்முறையை சுமார் 50% வரை அதிகரிக்கிறது என்ற புதிய மற்றும் வியப்பூட்டும் தகவலை இந்த செயற்கை நுண்ணறிவு கண்டறிந்தது.

இதுவரை எந்த அறிவியல் ஆய்வறிக்கைகளிலும் இடம்பெறாத புதிய வழியை இது கண்டறிந்திருப்பது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மனித நரம்பிய நாளமில்லா செல்களைக் கொண்டு இந்த மருந்து கலவையை சோதித்து, அதன் செயல்திறனை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், மருத்துவ உலகில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. கூகுள் நிறுவனம் இந்த செயற்கை நுண்ணறிவு மாதிரியை பொதுவெளியில் வெளியிட்டுள்ளது. மேலும் பல ஆய்வுகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகே முழுமையான சிகிச்சை முறையாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.