Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிரோன், ஏஐ துறையில் ஆராய்ச்சிகள்: விஐடி மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: சென்னை விஐடி பல்கலைக் கழகமானது சர்வதேச மகளிர் தின விழாவை நேற்று நடத்தியது. உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் இந்த விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஆளில்லா பறக்கும் விமானம், ட்ரோன்கள், மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் துல்லிய வேளாண்மை, கடலோர ஆராய்ச்சி, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆய்வுகள் ஆகியவற்றில் கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை விஐடி மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே நேற்று கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி நிறுவனர் விசுவநாதன் மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் சவுமியா சுவாமிநாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில் சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது: வீடுகளில் உள்ள பெண்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவு இல்லாமல் நம்மில் யாரும் சாதனை செய்திருக்க முடியாது. ஆண்களும் மிகவும் முக்கியமானவர்கள்தான். ஆண்களுக்கு இணையாக ஆதரவு அளிக்கப்படாவிட்டால் பாலின சமத்துவத்தை அடைய முடியாது. சமமான பங்களிப்பு இல்லாமல் நாடு வளர்ச்சி அடைய முடியாது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சம வேலைக்கு சம ஊதியம் என்பதில் உலக அளவில் இடைவெளி இருந்து வருகிறது. இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் பெண்களுக்குத்தான் மகப்பேறு விடுப்பு மற்றும் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படுகிறது. ஆண்களுக்கும் குழந்தைகளை பராமரிக்க விடுப்பு வழங்க வேண்டும். பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளினால் தான் பணியிடங்களில் பெண்கள் பணி செய்ய முடியாததற்கு ஒரு காரணமாக உள்ளது. தமிழ்நாடு பெண்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்புக்கு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

விஐடி வேந்தர் விசுவநாதன் பேசியதாவது: உலக அளவில் 60 சதவீதம் பணிகளை பெண்கள் செய்கின்றனர். உலக உணவு உற்பத்தியில் 50 சதவீதம் பெண்களால் செய்யப்படுகிறது. ஆனால், அவர்கள் சம்பளத்தில் 10 சதவீதம் மட்டுமே சம்பாதிக்கிறார்கள். உலகில் 1 சதவீதம் சொத்தை மட்டுமே பெண்கள் வைத்திருக்கிறார்கள். வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, ​​நாம் பெண்கள் முன்னேற்றத்துக்கு நிறைய செய்ய வேண்டும். 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார். பெண்களும் பங்கேற்று சமமான கல்வியைப் பெற்றால் மட்டுமே அது சாத்தியமாகும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக இலங்கை பாதுகாப்பு துறையின் உதவி செயலர் சச்சினி திசாநாயக்க, விஐடி துணை தலைவர் ஜி.வி. செல்வம், இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய கேப்டன் லட்சுமி, விஐடி ஆலோசகர் கல்யாணி, விஐடி இணை துணை வேந்தர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.