Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கரும்பு ஜூஸ் குடிப்பது உடலுக்கு நல்லதல்ல...; சர்க்கரை அதிகம் என்பதால் ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

சென்னை: கரும்புச்சாறில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் அதை அதிகமாக குடிப்பது உடலுக்கு நல்லது இல்லை என ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. தொடர்ந்து ஏப்ரல் மாதம் முதல் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. அவ்வப்போது மழை பெய்தாலும் பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. வெயிலின் தாக்கம், வெப்ப அலை அதிகரித்த வண்ணம் உள்ளதால், பொதுமக்கள் காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என அரசு மற்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கடை தெருக்களில் ஜூஸ் கடைகள் செயற்கை குளிர்பானங்கள், ஐஸ் கிரீம் பார்லர்கள் என புதிது புதிதாக கடைகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், குறிப்பாக கரும்பு ஜூஸ் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்களிடம் தொடர்ந்து ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொடர்ந்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது. இதற்காக, ஐசிஎம்ஆர், தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் (NIN) இணைந்து இந்த நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில், செயற்கை குளிர்பானங்கள் குடிக்கவேண்டாம் என்றும் அதிக சர்க்கரை குறிப்பாக கரும்பு சாறு அதிகமாக குடிப்பது உடலுக்கு நல்லது இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 100 மில்லி லிட்டர் கரும்புச்சாறில் 13-15 கிராம் அளவில் சர்க்கரை உள்ளது. பொதுவாக பெரியவர்கள் ஒரு நாளுக்கு 30 கிராமுக்கு மேல் சர்க்கரையை உட்கொள்ளக்கூடாது. அதே சமயம் 7 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் 24 கிராம் வரை மட்டுமே உட்கொள்ள வேண்டும். கரும்பு சாறு விலை குறைவானது மற்றும் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும் என்பதால் அனைவரும் இதனை குடிக்க விரும்புவார்கள். அதன்படி பார்த்தால் கரும்பு ஜூஸ் அதிகமாக குடித்தால் அதிக சர்க்கரை உடலுக்கு சென்று அது ஆபத்தை உருவாக்கும்.

மேலும் பழச்சாறில் சர்க்கரை சேர்த்து அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் பழங்களை ஜூஸ் போடாமல் அப்படியே சாப்பிடும்போதுதான் அதிலுள்ள பைபர் மற்றும் நியூட்ரியண்ட் சத்துக்கள் கிடைக்கும் என்றும் பழத்தை ஜூஸ் போட்டு அருந்தும்போது பழத்தின் மொத்த சத்தில் 100-150 கிராம் அளவு சத்து மட்டுமே உடலில் சேரும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட சாஃப்ட் டிரிங்ஸ்களை தவிர்த்து அதற்கு பதிலாக மோர், இளநீர் ஆகியவற்றை அருந்தலாம் என்று பரிந்துரைத்துள்ளது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க சர்க்கரை, உப்பு மற்றும் எண்ணெய் உட்கொள்வதை குறைத்துக்கொள்ளவும் ஐசிஎம்ஆர் அறிவுறுத்தி உள்ளது.