பெரம்பூர்: ஓட்டேரி திடீர் நகர் பிரிக்ளின் சாலையை சேர்ந்தவர் நெபிஷா (58). கணவரை விட்டுப் பிரிந்து தனது மகள் மற்றும் பேரனுடன் வசித்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நெபிஷா வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த இமானுவேல், மூதாட்டியின் தலையணையில் தீ வைத்துள்ளார். திடுக்கிட்டு எழுந்த நெபிஷா அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இமானுவேலை எச்சரித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த நெபிஷாவின் போர்வையில் இமானுவேல் மற்றும் இருவர் மீண்டும் தீ வைத்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நெபிஷா அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் தீயை அணைத்தனர்.
இதுகுறித்து நெபிஷா தலைமைச் செயலக காலனி குடியிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து திடீர் நகரைச் சேர்ந்த இமானுவேல் (19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது 15 வயது சிறுவர்கள் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில், நெபிஷா அடிக்கடி அவதூறாக பேசியதால் ஆத்திரத்தில் தீ வைத்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் இமானுவேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் இருவரையும் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.