Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உள்நாட்டு விமான புறப்பாடு பகுதியில் பயணிகளுக்கு பாஸ்ட் டிராக் திட்டம் விரிவு

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையம், டெர்மினல் 4 புறப்பாடு பகுதியில் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு பாஸ்ட் டிராக் எனும் புதிய அதிநவீன திட்டம் விரிவுபடுத்தி, தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் டெர்மினல் 4லிருந்து புறப்படும் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானப் பயணிகளுக்கு பாஸ்ட் டிராக் எனும் அதிநவீன திட்டத்தை விரிவுபடுத்தி, தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான பயணிகள், தங்களின் உடைமைகளை தானியங்கி இயந்திரங்கள் மூலம் ஸ்கேனில் பரிசோதித்து, கன்வேயர் பெல்ட் வழியாக விமானத்தில் ஏற்றுவதற்கு அனுப்பி வைக்கலாம். இதற்காக சென்னை உள்நாட்டு விமான முனையம், புறப்பாடு பகுதியான டெர்மினல் 4ல், பாதுகாப்பு சோதனைக்காக 8 தானியங்கி கவுன்டர்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. இதில் ஊழியர்களுக்கு பதிலாக தானியங்கி அதிநவீன இயந்திரங்கள் மட்டுமே இருக்கும்.

அந்த இயந்திரத்தில் தங்களின் உடைமைகளை பயணிகள் வைத்துவிட்டு, விமான டிக்கெட்டின் பிஎன்ஆர் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பயணிகளுக்கு தானியங்கி முறையில் போர்டிங் பாஸ் வரும். அந்த பாசை மற்றொரு தானியங்கி இயந்திரத்தில் பயணிகள் ஸ்கேன் செய்தால், அவர்களின் உடைமைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக என்னென்ன பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விவரங்கள் தொடுதிரை மூலமாக தெரியவரும். அவற்றை பரிசோதித்து பயணிகள் ஓகே பட்டனை அழுத்த வேண்டும்.

அதோடு, தங்களின் உடைமைகள் எண்ணிக்கையை பதிவு செய்ய வேண்டும். அந்த தானியங்கி இயந்திரத்தில் பயணிகள் எடுத்து செல்லும் உடைமைகளின் எடை தொடுதிரையில் காட்டும். இதையடுத்து, தங்களின் உடைமைகளில் பயணிகள் டேக்குகளை ஒட்டி, அதன் அருகில் உள்ள கன்வேயர் பெல்டில் வைக்க வேண்டும். அவர்களின் உடைமைகள் கன்வேயர் பெல்ட் மூலம் விமானத்தில் ஏற்றுவதற்கு தானாகவே சென்றுவிடும். இந்த புதிய பாஸ்ட் டிராக் திட்டத்தின் மூலமாக பயணிகள் போர்டிங் பாஸ், தங்களது உடைமைகளின் பாதுகாப்பு சோதனை, அவற்றை விமானத்துக்கு அனுப்பி வைப்பது போன்றவற்றுக்கு பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அப்பணிகளை விரைந்து முடித்து, விமானத்தில் பயணிகள் ஏறுவதற்கு தயாராகிவிடலாம். இந்த புதிய திட்டத்துக்கு ‘பாஸ்ட் டிராக் செல்ஃப் பேக்கேஜ் டிராப்ட் (எஸ்பிடி)’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்நாட்டு முனையத்தின் டெர்மினல் 4 புறப்பாடு பகுதியில், தற்போது ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான பயணிகளுக்கு பாஸ்ட் டிராக் திட்டம் விரிவுபடுத்தி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ஏர்இந்தியா ஏர்லைன்ஸ் விமான பயணிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. இதன்மூலம் விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இத்திட்டம் ஏற்கெனவே சென்னை உள்நாட்டு விமான முனையம், டெர்மினல் 1 புறப்பாடு பகுதியில், கடந்த ஏப்ரல் 11ம் தேதி இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு அமலில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.