கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் சோதனைசாவடி பகுதியில் நேற்றிரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த அரசு பேருந்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சென்னையை சேர்ந்த 2 பயணிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. கும்மிடிப்பூண்டி அருகே எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைசாவடி மையம் அமைந்துள்ளது.
இவ்வழியே சென்னையில் இருந்து ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களுக்கும், அங்கிருந்து சென்னைக்கும் ஏராளமான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும், இவ்வழியே ஆந்திராவில் இருந்து சென்னைக்கு அதிகளவில் போதைபொருட்கள் கடத்தி வரப்படுவதால் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எளாவூர் சோதனைசாவடி அருகே நேற்றிரவு ஆரம்பாக்கம் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு வந்த அரசு பேருந்து ஒன்றை நிறுத்தி, பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்பேருந்தில் 2 பயணிகளிடம் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி ரூ.1.10 கோடி மதிப்பில் 68 கிலோ எடையிலான வெள்ளி நகைகளை சூட்கேஸ் பெட்டியில் வைத்திருப்பதை போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, ஆந்திர பேருந்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 கோடி வெள்ளி நகைகள் எடுத்து வந்த பயணியை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் ஆவடி அருகே திருமுல்லைவாயலை சேர்ந்த யோகேஷ் (32), சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த பிரதீப் (18) எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர்களிடம் வெள்ளி நகைகளை கடத்தி வந்தார்களா, இதன் உரிமையாளர் யார், இதற்குரிய ஆவணங்கள் உள்ளதா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான வெள்ளி நகைகளுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வணிகவரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பிடிபட்ட 2 பேரிடமும் வணிகவரி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


