சென்னை: நாகரிகத்தை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசக்கூடாது என்று கவிஞர் காசிமுத்து மாணிக்கம் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு துணை முதல்வர் பதவி தருவதாக பழனிசாமி என்னை அழைத்தார் என திருமாவளவன் சொல்லி பல நாட்களாகி விட்டன இன்று தான் பழனிசாமி வாய் திறக்கிறார். துரைமுருகனை பார்த்து இவர் பரிதாபப்படுகிறாராம். சீனியாரிட்டி பேசும் இவர், இவருக்கு முன்னே 2 முறை முதல்வராக இருந்த ஒ.பி.எஸ்சை விட்டு, 1977 முதல் எம்எல்ஏவாக, மாவட்ட செயலாளராக 1980 முதல் இருந்து வரும் செங்கோட்டையனை விட்டுவிட்டு முதல்வரானது ஏன்?
மூத்தோர் ஆர்.எம்.வியை அழைத்து கொடுத்திடாததை, பண்ருட்டி, பொன்னையனிடம், அன்வர் ராஜாவிடம், முத்துசாமி, திருநாவுக்கரசிடம் போகவேண்டியதை தடுத்து நீங்கள் எப்படி வந்தீர்கள்? துணை முதல்வர் பதவியை இளைஞர் சமுதாயத்திடம் ஒப்படைத்தால் நன்றாக இருக்கும் என சீனியர் பேராசிரியர் சொல்லி எப்படி தளபதி துணை முதல்வர் ஆனாரோ. அப்படித்தான் துரைமுருகனே கூறித்தான் உதயநிதி துணை முதல்வர் ஆனார். இதெல்லாம் காலில் தவழ்ந்து வந்தவருக்கு புரியாது. சரோஜாதேவி மறைவிற்கும் அ.தி.மு.க.வினர் யாரும் வரவில்லை. மு.க.முத்துவின் மரணத்திற்கும் அதிமுகவினர் யாரும் வரவில்லை எதார்த்தத்தையும், நாகரீகத்தையும் பற்றி பழனிச்சாமி பேசக்கூடாது.
பழனிச்சாமிக்கு உண்மையான நெஞ்சுரம் இருக்கும் என்றால் துணை ஜனாதிபதியை கூட்டணி கட்சியான அதிமுகவிற்கு கேட்க வேண்டும். துணை ஜனாதிபதியாக ஒ.பி.எஸ்சை அறிவியுங்கள் என்று சொல்லிவிட்டு, இரண்டு கட்சியையும் ஒன்று சேர்க்கிற வழியை பழனிசாமி பார்க்கட்டும்.