Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறார்கள் ஓட்டி வரும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டாம்

*பெட்ரோல் நிலையங்களுக்கு காவல்துறை சுற்றறிக்கை

நாகர்கோவில் : இளம் சிறார்கள் ஓட்டி வரும் கார், பைக்குகளுக்கு எரிபொருள் நிரப்பாதீர்கள். உடனடியாக காவல்துறைக்கு அந்த பதிவு எண்ணை தெரிவிக்க வேண்டும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், பணியாளர்களை காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில், எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவின் பேரில் தினமும் காலை மற்றும் மாலையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில் அதிகளவில் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளம் சிறார்கள் அதி வேகமாக சென்று விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பதுடன், எதிரே வரும் வாகனங்கள் மற்றும் சாலையில் நடந்து செல்பவர்கள் மீதும் மோதி விபத்துக்களை ஏற்படுத்தி உயிரிழப்புகளை நிகழ்த்துகிறார்கள்.

இது போன்ற விபத்துக்களை தடுக்கும் வகையில் காவல்துறையில் தீவிர சோதனை நடத்தி குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள், 18 வயதுக்கு கீழ் வாகனங்கள் ஓட்டும் இளம் சிறார்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளன.அந்த வகையில் குமரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக 18 வயதுக்கு கீழ் வாகனம் ஓட்டும் இளம்சிறார்கள் அல்லது அவர்களது பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கும் நடவடிக்ைககள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இளம் சிறார்கள் மீதான வழக்கை தவிர்க்க விரும்பிய வகையில் அவர்களின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். இந்த வழக்குகளில் இளம் சிறார்களை இளம் பிழையாளிகள் என குறிப்பிட்டு அந்தந்த சட்டம் ஒழுங்கு பிரிவு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய பிஎஸ்என் சட்டத்தின் கீழ் பிரிவு 281, 125, 199 (a) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இதன் அடுத்த கட்டமாக பெட்ரோல் நிலையங்களில் இளம் சிறாரகள் பைக், கார்கள் ஓட்டி வந்தால் எரிபொருள் நிரப்ப வேண்டாம் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 400க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களுக்கு எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவின் பேரில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை அந்தந்த பெட்ரோல் பங்க்குகளில் ஒட்டப்பட்டுள்ளது.

இதில், குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி இளம் வயதினர் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் நோக்கில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இளம் வயதினர் வாகனம் ஓட்டுவது மோட்டார் வாகன சட்டப்பிரிவு 199 ஏ (4) ன் படி குற்றமாகும். எனவே தங்களது பெட்ரோல் பங்க்கிற்கு பதினெட்டு வயது பூர்த்தியாகாத இளம் வயதினர் (வாகன ஓட்டுனர் உரிமம் பெறாதவர்) எரிபொருள் நிரப்ப வந்தால் அவர்களை எச்சரித்து அவர்களின் வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பாமல் அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் பெட்ரோல் நிலையத்திற்கு எரிபொருள் நிரப்ப இளம்சிறார்கள் ஓட்டி வரும் வாகனங்களின் எண்களை போக்குவரத்து ஒழுங்கு பிரிவுக்கு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளனர்.