Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்தவர்களுக்கு திருக்குறளை நினைவுபடுத்திய 18-வது நாடாளுமன்ற தேர்தல்: திமுக அறிக்கை

சென்னை: திமுக வெளியிட்ட அறிக்கை: நடந்து முடிந்துள்ள 18-வது நாடாளுமன்றத் தேர்தல் ஓர் அருமையான திருக்குறளை நமக்கு நினைவுபடுத்தியுள்ளது. போர் ஒன்று நடக்கிறது. எதிரிகள் போர்க்களத்தை நோக்கித் திரள்கின்றனர். அவர்களைப் பார்த்து தடுத்து ஒரு வீரன் சொல்கிறான், “இதற்கு முன் நிகழ்ந்த போர்களில் என் தலைவரை எதிர்த்துப் போர் புரிந்தவர் பலர். அவர்கள் எல்லாம் என்ன ஆயினர் தெரியுமா? அவர்கள் எல்லாம் போர்க் களத்தில் தோற்றனர். எனவே, போர்க்களம் செல்லாதீர், என் தலைவரை எதிர்த்துப் போரிடாதீர், போரிடுவீர்களே ஆனால் நீங்களும் தோற்று விடுவீர்கள். போர்க்களம் செல்லாதீர்” எனத் தடுத்தான் அந்த வீரன். அவன் கூறியதைக் கேளாமல் போர்க்களம் சென்று தோற்றவர் பலர். இதனை

“ என்னைமுன் நில்லன்மின் ! தெவ்விர் பலரென்னை

முன்னின்று கல் நின்றவர் !”

என்று குறள் கூறுகிறது.

போர்க்களத்து வீரன் ஒருவன், “பகைவர்களே, என் தலைவனை எதிர்த்து நிற்காதீர், முந்தைய போர்களில் அவனை எதிர்த்து தோல்வி கண்டவர்கள் பலர்” என முழங்குகிறான். இது கலைஞர் திருக்குறளுக்கு வழங்கும் பொருள். இதைப்போலத்தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்தவர்கள் எல்லாம் தேர்தல் களத்தில் தோற்றனர். அவர்கள் கட்டிய முன் பணத்தையும் இழந்து பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதியன்று வெளியாகின. அதிமுக கூட்டணி, ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. மேலும், 12 தொகுதிகளில் இரண்டாம் இடத்தையும் இழந்து மூன்றாம் இடத்திற்குச் சென்றுவிட்டது. கூட்டணி கட்சியான தேமுதிகவும் டிபாசிட்டை பறிகொடுத்துள்ளன. புதுச்சேரியிலும் அதிமுக, டிபாசிட்டை இழந்துள்ளது. தென்சென்னை தொகுதியில், அதிமுக, முன்னாள் அமைச்சரின் மகன் ஜெயவர்தன் போட்டியிட்டு, மூன்றாம் இடம் பெற்றதுடன், டிபாசிட்டையும் பறி கொடுத்துள்ளார். அதேபோல், பாஜக, 11 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான பாமக, 6 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும், அமமுக 1 தொகுதியிலும் டிபாசிட் இழந்துள்ளன. நாம் தமிழர் கட்சி, அனைத்துத் தொகுதிகளிலும் டிபாசிட் இழந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும், 2024 தேர்தலோடு தமிழ்நாட்டில் உள்ள ஆளும் கட்சி காணாமல் போய்விடும் என்று பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் இன்று, தமிழ்நாட்டில் காணாமல் போய் உள்ளது பாஜவும் அவர்களுடைய கூட்டணிக் கட்சிகளும்தான். திமுக நாற்பதுக்கு நாற்பதும் வென்று இந்தியாவிற்கே வழிகாட்டியுள்ளது என்பதை பத்திரிகைகள் பாராட்டுகின்றன. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட கோவை தொகுதியில் திமுகவின் புதுமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.